தமிழகத்தில் பீகார் மக்களுக்கு துன்புறுத்தலா? பிளவு அரசியலை பேசியிருக்கும் மோடி! ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: தமிழகத்தில் பீகார் உழைக்கும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என பிரதமர் மோடி, ஆதாரமற்ற பிளவு அரசியலை பேசியிருப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிளவு அரசியலைத் தொடர்ந்து பேசி பதவிக்கான கண்ணியத்தைக் குறைத்து விட்டார் பிரதமர் மோடி.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
நேற்று முன்தினம் பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திமுக ஆளும் "தமிழ்நாட்டில் பீஹாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களைத் துன்புறுத்துகின்றனர்" என்று அபாண்டமாகக் குற்றம்சாட்டிப் பேசியிருக்கிறார்.
நாட்டின் பிரதமர் பொறுப்பு என்பது கண்ணியத்துக்கு உரியது. ஆனால் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிற பிளவு அரசியலைப் பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் கருத்து அவரது முந்தைய வெறுப்பு பேச்சுகளைப் போல் ஆதாரமற்றது மட்டுமின்றி ஆழமான பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை என்பதில் ஐயமில்லை.
பீகார் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அமைதியாக வேலை செய்கிறார்கள், மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்கிறார்கள். அவர்களைத் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களாகப் பிரதமர் சித்தரித்திருப்பது தமிழ்நாட்டில் அவர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே ஒடிசா தேர்தலின் போது தமிழரை ஒரிசாவின் முதலமைச்சராக அமர்த்தப் போகிறீர்களா என்று கேள்வி கேட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வடநாட்டு மக்களிடையே கொடுங்கோன்மைக்காரர்களாக சித்தரிக்கும் போக்கை மோடி கடைப்பிடித்து வருகிறார்.
வட மாநிலங்களில் தமிழர்கள் குறித்த தவறான பிம்பத்தைக் கட்டமைக்கும் பாஜகவினருக்குத் தமிழ்நாட்டு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள். சிறுபான்மை சமூகத்துக்கு எதிராகவும் நாட்டில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்கும் விதமாகவும் பேசி வரும் பிரதமர் அவர்கள் தனது பதவிக்கான கண்ணியத்தையும் மாண்பையும் குறைத்து விட்டார்.
பிரதமர் தனது தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகின்றேன்.
பிரதமர் மோடியின் தமிழர் விரோதக் கருத்துகள் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்னவென்பதை எடப்பாடி பழனிசாமி விளக்குவாரா? என அவர் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பீகாரி மக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அவமதிக்க படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருப்பது, முழுமையாக ஆதாரமற்றது அரசியல் நோக்கம் உடையது ஆகும். தமிழ்நாடு என்றென்றும் மொழி, மத, இன வேறுபாடு கடந்து, ஒற்றுமையுடன் வாழும் மண்ணாக திகழ்கிறது.
ஆனால் உண்மையில், 2014 ஆம் ஆண்டு முதல், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பின்னர், வட மாநிலத்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றம், தமிழ்நாட்டில் வேகமாக நடைபெற்று வருகிறது. இது சாதாரண வேலைவாய்ப்பு தேடல் அல்ல . தமிழகத்தின் மக்கள் தொகை அமைப்பை மாற்றி, வருங்காலத்தில் இந்தி பேசும் வாக்காளர் அடிப்படையை உருவாக்கி, மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் நடக்கும் திட்டமிட்ட அரசியல் சதி.
இதனிடையே பல வடமாநிலத்தவர்கள், தமிழ்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது காவல் துறைப் பதிவுகள் மூலம் வெளிவந்துள்ளன. ஆனால், அதைப் பற்றிப் பிரதமர் மோடி அவர்கள் ஒரு சொல்லும் கூறாமல், மாறாக தமிழ்நாட்டு அரசையும், மக்களையும் குற்றம் சாட்டும் வகையில் பேசியிருப்பது மிகுந்த பொறுப்பில்லாத, தமிழகத்தின் மரியாதைக்கு எதிரானது ஆகும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறிய இந்தப் பொய்யான, பிரிவினையை ஊக்குவிக்கும் பேச்சைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மோடி அவர்கள் உடனடியாக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். 2014 க்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வடமாநிலத்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு உரிமை மற்றும் வாக்குரிமை அமைப்பைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு, தமிழ்நாடு அரசு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications