சென்னை வரும் மோடி.. ரெடியாகும் “அரசியல் சதுரங்கம்”! ரெடியாகும் லிஸ்ட்.. காய்நகர்த்தும் "இலைகள்"
சென்னை: அதிமுக உட்கட்சிப்பூசல் தொடர்ந்து வரும் நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச இரு தரப்பினரும் திட்டமிட்டு உள்ளனர்.
Recommended Video
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

பொதுச்செயலாளர் எடப்பாடி
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை திரும்பிய எடப்பாடி
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்ள சென்ற எடப்பாடி பழனிசாமி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்றும், இடைபட்ட நேரத்தில் அதிமுக உள்கட்சி நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் விவாதிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்த சூழலில் பிரதமரை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

பாஜகவின் நிலைபாடு
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது பாஜக தலைமை அதிருப்தி இருப்பதாக செய்திகள் வெளியாகின. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு எதிராக செயல்படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டும் தீர்மானம் பொதுக்குழுவிலிருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளுக்கும் இதுவே காரணம் என்று பேசப்படுகிறது.

சென்னை வரும் மோடி
இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். இம்முறை தமிழ்நாட்டில் 2 நாட்கள் அவர் தங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை சந்திக்க இருதரப்பினரும் திட்டமிட்டு வருகிறார்களாம். நேற்று அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமாரே இதை உறுதிபடுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் நகர்வு
பொதுக்குழு, ஒற்றைத் தலைமை, வங்கிக் கணக்கு, தலைமை அலுவலகம் தொடர்பான அனைத்து வழக்குகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக போனாலும் டெல்லியின் மீதான நம்பிக்கையை இழக்காமல் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வருகிறார். அண்மை காலங்களில் நடந்து வரும் நிகழ்வுகள் தங்களுக்கு ஊக்கம் கொடுக்க அடையாறு இல்லத்தில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டும் வரும் ஓபிஎஸும் சென்னை வரும் மோடியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம். அப்படி சந்தித்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு எதிராக பிரதமரிடம் புகாரளிக்க விரிவான பட்டியலையும் அவர் தயாரிக்க சொல்லி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications