தொடங்கியது காசி தமிழ் சங்கமம்.. தமிழகத்தில் இருந்து படையெடுப்பு.. தமிழில் பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பு இன்று (டிசம்பர் 2)ம் தேதி காசியில் தொடங்கியது. டிசம்பர் 15ம் தேதி வரை விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கியுள்ள நிலையில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், காசிக்கும் இடையேயான தொடர்பை காட்டும் வகையில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4வது பதிப்புக்கான காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று காசியில் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு 'தமிழ் கற்கலாம்' என்ற முழக்கத்துடன் நடைபெறுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த லோக்சபா தொகுதியான வாரணாசியில் இந்த விழா தொடங்கி உள்ளது. இன்று தொடங்கிய நிகழ்ச்சி டிசம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு வருகை தந்து காசியின் பெருமையையும், தமிழகத்துடனான தொடர்பையும் அறிந்து கொள்வதுடன், ஆன்மிக அனுபவத்தைப் பெற உள்ளனர். பள்ளிகளில் தமிழ் மொழிமற்றும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தவும், மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழகத்தில் இருந்து 50 ஆசிரியர்கள் காசிக்கு செல்ல உள்ளனர்.
இந்நிலையில் தான் காசி தமிழ் சங்கத்தையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, ‛‛காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கியுள்ள நிலையில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!'' என கூறியுள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ் பண்பாடு, புராதனமான கலாசாரம், நாகரீக தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதுடன், தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications