செல்லாது செல்லாது.. எனக்கு தான் அதிகாரம்! அப்பாவுக்கு பாடம் எடுத்த அன்புமணி! பனையூரில் பரபர மீட்டிங்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ராமதாஸ் தரப்பில் இன்று பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே சென்னை பனையூரில் அன்புமணி தலைமையில் அரசியல் தலைமை குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸுக்கு தான் அதிகாரம் இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் மோதல் நிலவியது. தந்தை மகன் இடையேயான மோதல் கட்சி நிர்வாகிகளை தூக்கி அடிப்பது வரை வந்து நின்றது. மற்ற கட்சிகள் தேர்தல் வேலைகளை துவங்கி விட்டு நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும் உட்கட்சி பூசலில் சிக்கி தவித்ததால் அதிருப்தி அடைந்தனர் நிர்வாகிகள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார். அதிலிருந்து தந்தை மகன் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களான திலகபாமா உள்ளிட்டோரை நீக்குவதாக அறிவித்ததோடு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களையும் நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதுவரை 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உச்சகட்டமாக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவரான பாலுவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜிகே மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்ட சிலரை தவிர குறிப்பாக தன்னைத் தவிர பெரும்பாலானோரை ராமதாஸ் மாற்றி இருக்கிறார். பொது செயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், வன்னியர் சங்கத்தில் 15க்கும் மேற்பட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.
இப்படி நிகழ்வுகள் பரபரப்பாகி கொண்டிருக்க திடீரென இன்று பாமக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார் ராமதாஸ். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தலைவர் அன்புமணி புறக்கணித்த நிலையில் அதில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக 2026 இல் கூட்டணி அமைக்க ராமதாசுக்கு அதிகாரம், பாமக நிறுவனற்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம், கட்சியை பலவீனப்படுத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை, ராமதாஸின் பேச்சை கேட்காமல் இருக்கும் அன்புமணிக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சென்னை பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் அரசியல் தலைமை குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட கலந்து கொண்டனர். இதில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, திருபுவனம் காவல் நிலைய கொலை வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக முதல் தீர்மானத்திலேயே ராமதாஸ் தரப்புக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில்," மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வன்னியர்கள், இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள் ஆகியோருக்கு மாநில அளவிலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு தேசிய அளவிலும் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள். அவரது வழிகாட்டுதலில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்புள்ள கட்சியாக செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புகளுக்கு உரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து வழிநடத்திச் செல்லப் போவதாக கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடந்த ஏப்ரல் 12 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டு இருந்ததை இந்தக் கூட்டம் நினைவு கூறுகிறது. அவரது நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும். கட்சியின் நிறுவனரான மருத்துவர் அய்யா அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் கொண்டாடுகிறது; போற்றி வணங்குகிறது.
அதேநேரத்தில் கட்சியை வழிநடத்திச் செல்வது பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் பணியாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு; பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதி 15ன் படி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பதை இக்கூட்டம் நினைவு கூர்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களால் அழைக்கப்பட்டு, கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானவை ஆகும்.
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தலைமை மீது இந்தக் கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியினை தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நின்று, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு கூட்டம் உறுதி ஏற்கிறது" என கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்த தீர்மானத்தின்படி ராமதாஸ் நடத்திய கூட்டம் செல்லாது எனவும், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணிக்கு தான் அதிகாரம் இருக்கிறது என வெளிப்படையாகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தந்தை மகன் இடையே நடக்கும் மோதல் தீவிரம் அடைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications