ஸ்டாலினுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன்? ராமதாஸை இப்படியா சொல்றது? கேட்பது யார் பாருங்க.. பேசவருதா பாஜக?
சென்னை: டாக்டர் ராமதாசை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை போனால் போகட்டும் என அப்படியே கடந்து செல்ல முடியாது என்று பாமகவினர் கொந்தளித்து வருகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, தமிழக சட்டமன்றத்திலும் அதானி விவகாரத்தை எழுப்ப பாமக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. என்ன நடக்கிறது பாமகவில்?
அதானியுடனான சந்திப்புக் குறித்து டாக்டர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறியிருந்தார்.

ராமதாசை கொச்சைப்படுத்தும் வகையில் ஸ்டாலின் பதிலளித்துள்ளது, பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முதல்வரின் பேச்சினை கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தபடி உள்ளனர். ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமகவினர் ஆவேசமாக கூறி வருகிறார்கள்.
தவிர்க்கலாம்: இந்த நிலையில், திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரும் ஒருவருக்குள் ஒருவர் தொடர்பு கொண்டு, "ராமதாசை சிறுமைப்படுத்தும் வகையில் தலைவர் (ஸ்டாலின்) பேசியிருக்கக்கூடாது. தவிர்த்திருக்க வேண்டும். தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் மூத்த தலைவர்களில் ஒருவர், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர். அவரது அறிக்கைக்கும், கேட்கும் கேள்விகளுக்கும் தேசிய அளவில் ஒரு மரியாதை உண்டு.
அப்படியிருக்கையில், அவரை புறம் தள்ளும் வகையில் பேசியிருப்பது முதல்வர் பதவிக்கு அழக்கல்ல.. அதானி பற்றி கேள்வி எழுந்தாலே அவர் ஏன் டென்ஷனாக வேண்டும்? அப்படி டென்ஷன் ஆவதால்தான், எதற்காக சந்தித்தார்கள் என்று, நமக்கே சந்தேகம் வருகிறது.. தலைவர் இப்போதெல்லாம் அடிக்கடி உணர்ச்சிவயப்பட்டு விடுகிறார்" என்று பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்களாம் அமைச்சர்களுடன் தொடர்புடையவர்கள்.
பாமக ராமதாஸ்: மொத்தத்தில், ராமதாஸை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியிருப்பதை தவிர்த்திருக்க வேண்டும் என்பதே திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் பேசு பொருளாக இருக்கிறது. அதாவது, எதிர்க்கட்சிகள் எப்போதும் ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டுதான் இருக்கும். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதுதானே? என்கிற ரீதியில் அவர்களின் பேசு பொருள் இருக்கிறது.
இதனிடையே, இந்த விஷயத்தை பாமகவும் விடுவதாக இல்லையாம்.. தமிழக சட்டமன்றத்தில், அதானி விவகாரத்தை எழுப்ப பாமக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும், அதிமுக, பாஜகவும், அதானி விவகாரத்தை கையில் எடுப்பார்களா? என்கிற சந்தேகமும் பாமகவுக்கு உள்ளதாம். காரணம், அதானி-ஸ்டாலின் சந்திப்பு விஷயத்தில், இதுவரை எடப்பாடி பழனிச்சாமியும் எந்த கேள்வியையும் எழுப்பவில்லையாம்.
கொந்தளிப்பு: எனவே, அதானி விவகாரம் சட்டமன்றத்தில் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டுமானால், அதிமுக-பாஜகவின் ஒத்துழைப்பு பாமகவுக்கு தேவைப்படுகிறதாம். இதில், அதிமுக, பாஜக நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை என்றாலும், திமுக மீதான பாமகவின் கொந்தளிப்பு இன்னமும் அடங்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications