எனது வெளிநாட்டு பயணங்களுக்கும் ஏற்பாடு செய்தவர்.. விகேடி பாலன் மறைவால் ராமதாஸ் வேதனை!
சென்னை: மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் வி.கே.டி பாலன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு சுற்றுலாத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரா ட்ராவல்ஸ் உரிமையாளர் வி.கே.டி பாலன் இன்று காலமானார். அவருக்கு வயது 70. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வி.கே.டி.பாலன் சென்னையில் இன்று காலமானார். திருச்செந்தூரில் 1954 ஆம் ஆண்டு பிறந்த தனபாலன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 1981 ஆம் ஆண்டு சென்னை வந்த அவர், இருக்க இடமின்றி எழும்பூர் இரயில் நிலைய பிளாட்பாரத்தில் தூங்கினார்.

அமெரிக்க தூதரகம் முன்பு வரிசை பிடித்துக் கொடுத்து 2 ரூபாய் சம்பாதித்த அவர் அதன்பிறகு டிராவல் ஏஜென்சியில் வேலை பார்த்து தொழில் நுணுக்கங்களை கற்று, 1986ல் சொந்தமாக டிராவல் ஏஜென்சி தொடங்கி பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். விகேடி பாலன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், எனது நண்பருமான வி.கே.டி பாலன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உழைப்பால் உலகளந்த மனிதர் என்ற பெருமைக்கு மிகவும் பொருத்தமானவர் வி.கே.டி.பாலன்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் திருச்செந்தூரில் பிறந்து வாழ்க்கை தேடி சென்னைக்கு வந்த அவர், தமது திறமையாலும், அயராத உழைப்பாலும் உயர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கை வழங்கியவர். அவரது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்ப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையில் உலகின் எந்த நாட்டுக்கும் விமானத்தில் இலவசமாக பயணம் செய்யவும், விடுதிகளில் தங்கவும் அனுமதி பெற்றவர்.
அனைவரிடத்திலும் அன்பையும், கனிவையும் பொழிபவர். என் மீது மட்டற்ற அன்பும், மரியாதையும் கொண்டவர். பலமுறை எனது வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பாடு செய்தவர். அவரது மறைவு சுற்றுலாத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். வி.கே.டி.பாலன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications