"வெட்கமாக உள்ளது".. தனக்கு தானே ரூ.1000 அபராதம் விதித்த பாமக ராமதாஸ்! காரணத்தை கேட்டா அசந்துடுவீங்க
தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என்பது தான் முழக்கம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம் என்ற பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு முழுக்க நடத்தி வருகிறார். இந்த பயணத்திற்கு இடையில் ராமதாஸ் தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் காப்பதற்காக தமிழைத் தேடி... என்ற தலைப்பில் பாமக சார்பாக அதன் நிறுவனர் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணம் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது.
28ம் தேதி வரை இந்த பயணம் நடக்க உள்ளது. மதுரையில் இந்த பயணம் முடிய உள்ளது. தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பயணத்தை ராமதாஸ் மேற்கொண்டு உள்ளார்.

பயணம் ராமதாஸ்
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்' என்பது தான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை; ஆலயங்களில் தமிழ் இல்லை; உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை; வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை; வீடுகளில் தமிழ் இல்லை; தாய்க்கும் சேய்க்குமான உரையாடல்களில் தமிழ் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பமாகவும், நோக்கமாகவும் உள்ளது.

நோக்கம் என்ன?
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும்; அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும்; பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 21-ஆம் நாள் உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். தமிழைத் தேடி.... விழிப்புணர்வு பரப்புரை பயணம் அரசியல் கலப்பற்ற, அரசியல் நோக்கமற்ற பயணமாகும்.

அரசியல் இல்லை
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் தாயைக் காப்பது எப்படி தவிர்க்க முடியாத கடமையோ, அதேபோல், தமிழர்களாக பிறந்த அனைவருக்கும் அன்னை மொழியான தமிழ்மொழியை காக்க வேண்டியதும் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழைத் தேடி.... விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை உலகத் தாய்மொழி நாளில் தொடங்குகிறேன். அன்னைத்தமிழை காக்கும் கடமையும், பொறுப்பும் ஊடகங்களுக்கும் உண்டு, என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பயணத்திற்கு இடையில் ராமதாஸ் தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

ஆங்கிலம்
ஆங்கிலம் கலந்து பேசியதால் அவர் இப்படி தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், சென்னையிலிருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது. இரண்டு மொழிகளை கலந்து பேசாதீர்கள். தமிழை பேசும் போது தமிழை மட்டும் பேசுங்கள். வேறு மொழியை கலக்காதீர்கள். முழுமையாக கூட ஆங்கிலத்தில் பேசுங்கள். ஆனால், தமிழ் பேசும்போது பிறமொழி கலந்து பேசாதீர்கள். தமிழ்நாட்டில் #தமிழ் அரியணை ஏற்றப்பட வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அதற்காக எந்த ஈகத்தையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். அன்னைத் தமிழைக் காக்க ' #தமிழைத் தேடி...' பயணத்தை தொடங்கிறேன். தமிழகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். அன்னை மொழிக்கு மரியாதை செய்வோம. நான் இன்று பிறமொழி கலந்து 3 முறை பேசி, தவறு விட்டேன். அதற்கு எனக்கு நானே தண்டனை விதித்துக்கொண்டேன். , எனக்கு நானே 1,000 அபராதம் விதித்து கொண்டேன், என்று ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications