அன்புமணி கண்கள் பனிக்க..ராமதாஸ் இதயம் இனிக்க! முடிவுக்கு வந்த மோதல்! சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸு
சென்னை: பாமகவின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்த முட்டல் மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது. கட்சியின் தலைவராக அன்புமணியே இருக்க, இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார் ராமதாஸ். கட்சி நிர்வாகிகள் 99 சதவீதம் பேர் அன்புமணியின் பின்னால் இருப்பதால் கட்சி பிளவுபடுவதை தடுக்க அவரையே முன்னிலைப்படுத்த ராமதாஸ் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கட்சியின் தலைவரான அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதோடு செயல் தலைவராக நியமிப்பதாக அறிவித்ததில் இருந்தே பிரச்சனை தீவிரமடைந்திருக்கிறது.
அதற்குப் பிறகு நடந்த வன்னியர் சங்க மாநாட்டிலும் ராமதாஸ்-ன் பேச்சு கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் புயலை கிளப்பியது. அன்புமணி ராமதாஸோ, ராமதாஸின் கனவை நிறைவேற்றுவோம்.. ஐயா வழியில் நடப்போம் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அன்புமணியின் தாயை அடிக்க பாய்ந்தார், பாட்டிலை வீசினார் என்றெல்லாம் அவர் கூறிய கருத்துக்கள் பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து சில நிர்வாகிகளை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்ட நிலையில் அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்ததாக அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டார்.
இப்படியாக அடுத்தடுத்து பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் கட்சியின் பொதுக்குழு விரைவில் கூட்டப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் பொதுக்குழுவை கூட்டி அவர்தான் கட்சியின் தலைவர் என அங்கீகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இடையே ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வந்தது.
அருன்மொழி, தீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருதரப்பையும் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இரு தரப்புமே நேரில் சந்தித்து பேசிய நிலையில் ராமதாஸ் அன்புமணியிடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்ததாக கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். இந்த நிலையில் விரைவில் ராமதாஸ் அன்புமணி ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க இருக்கின்றனர்.
இது குறித்து பாமக நிர்வாகிகளிடம் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. பாமகவினர் அனைவருமே ராமதாஸ் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் கட்சியின் எதிர்காலமான அன்புமணி பின்னால் தான் அவர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இரண்டு மூன்று முறை ராமதாஸ் ஆலோசனை கூட்டத்தை நடத்திய நிலையில் ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
வன்னியர் சங்கமாக இருந்தாலும், பாட்டாளி மக்கள் கட்சியாக இருந்தாலும் 99 சதவீத நிர்வாகிகளின் ஆதரவு அன்புமணிக்கு தான் இருக்கிறது. போட்டி பொதுக்குழு உள்ளிட்ட விவகாரங்களை ராமதாஸ் கையில் எடுத்தால், அது அவருகு எதிராகவே திரும்பும். எனவே கட்சியின் வருங்காலமான அன்புமணிக்கு வழியை விட்டு தான் ராஜகுருவாகவே இருந்து கொள்கிறேன் என ராமதாஸ் வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம். கட்சியின் தலைவராக அன்புமணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு சிறிது காலம் ஓய்வெடுக்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.












Click it and Unblock the Notifications