ராமதாஸ் மீண்டும் அதிரடி.. வழக்கறிஞர் பாலுவிடம் இருந்து பதவி பறிப்பு.. வெளியான அறிவிப்பு
சென்னை: பாமக-வின் வக்கீல்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் பதவியில் இருந்து பாலுவை நீக்கி உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாலு வகித்து வந்த இந்த பொறுப்புக்கு புதியவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாமகவில் தற்போது அப்பா - மகன் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரடியாக மோதி வருகின்றனர். இந்த மோதல் பொதுவெளியில் நடந்து வருகிறது. அன்புமணி ராமதாஸ் மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதனால் பாமகவினர் தற்போது இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். ராமதாஸ்க்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், அன்புமணி ராமதாஸ்க்கு ஆதரவாக இன்னொரு தரப்பினரும் செயல்பட்டு வருகின்றனர். ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தனித்தனியே அவ்வப்போது ஆலோசனையையும் மேற்கொண்டனர்.
மேலும் பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களின் பதவிகளை ராமதாஸ் பறித்து வருகிறார். அதன்படி பல்வேறு மாவட்ட செயலாளர்களை அவர் நீக்கி உள்ளார். அந்த வரிசையில் தற்போது பாமகவின் வக்கீல்கள் சமூக நீதி பேரவையின் தலைவராக பதவி வகித்து வந்த வழக்கறிஞர் பாலுவை அந்த பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கி உள்ளார்.
பாமகவில் உள்ள பிரபலமான தலைவர்களில் வழக்கறிஞர் பாலுவும் ஒருவர். கட்சி சார்ந்த பல வழக்குகளில் நீதிமன்றங்களில் நடத்தியவர் தான் இந்த பாலு. தற்போது அவரது நீக்கம் பாமகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும் பாலுவுக்கு பதில் பாமகவின் வக்கீல்கள் சமூக நீதி பேரவையின் புதிய தலைவராக வழக்கறிஞர் விஎஸ் கோபு நியமிக்கப்பட்டுள்ளார்.
பாமகவில் அன்புமணி ராமதாஸ்க்கு ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவது கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பாலுவிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ், ராமதாஸை சந்தித்து பேசினார். இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நிர்வாகிகள் நினைத்தனர். ஆனால் பாமகவில் இன்னும் ராமதாஸ் -அன்புமணி இடையேயான பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.
ராமதாஸ் - அன்புமணி இடையே தொடரும் இந்த மோதல் காரணமாக பாமகவினர் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மோதல் என்பது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று கட்சியினர் வருத்தமடைந்துள்ளனர். மேலும் ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
பாமகவில் பிரச்சனைக்கு மத்தியில் நிர்வாகிகள் நீக்கம் தொடர்ந்து வந்தாலும் கூட அன்புமணி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளார். அன்றைய தினம் காலை, மாலை அமர்வுகள் என்று ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவானது வரும் 19 ம் தேதி வரை நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications