அன்புமணிக்கு எதிராக நீதிமன்றம் சென்ற ராமதாஸ்.. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கணும்.. ஹைகோர்ட்டில் மனு!
சென்னை: பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி கூட்டியதற்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அன்புமணியை கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், தனது இருக்கையில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்ததும் அவர் தான் என்று குற்றம்சாட்டி இருந்தார். உலகிலேயே தந்தையை ஒட்டுக்கேட்கும் ஒரே மகன் அன்புமணி மட்டும்தான் என்றும் விமர்சித்திருந்தார்.

இதனிடையே பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கும் என்று அன்புமணி அறிவித்திருந்தார். இன்னொரு பக்கம் ராமதாஸ் தரப்பு பாமகவின் மகளிர் அணி மாநாட்டிற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் நடத்தத் திட்டமிட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் இதன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேபோல் பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடக்கும் என்று ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அன்புமணிக்கு பொதுக்குழுவை கூட்ட உரிமை இல்லை என்றும் ராமதாஸ் கூறி இருந்தார். இந்த நிலையில் அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறது.
ராமதாஸால் பாமக மாநில பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பாமகவின் தலைவராக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி. அவரது தலைவர் பதவிக் காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
அதனால் பாமகவின் பொதுக்குழு, செயற்குழு, அவசர பொதுக்குழு ஆகியவற்றை கூட்டும் அதிகாரமும் பொறுப்பும் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. அதனால் அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரவிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
பாமகவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் நடைபெற்று வரும் மோதல், முதல்முறையாக நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. அதிமுக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதலும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற புள்ளியில் தான் தொடங்கியது. இதுவரை ஓபிஎஸ் தரப்பில் வழக்குகள் நடத்தப்பட்டு வந்தாலும், கட்சியை எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதலில் கட்சி யாரின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications