ஐயா.. எனக்கு நெஞ்சு வலிங்கய்யா.. போட்டிபோட்டு அட்மிட்டான முக்கிய தலைகள்.. தந்தை - மகன் மோதல் காரணமா?
சென்னை: பாமகவின் தலைவர் அன்புமணி தலைமையில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்த நிலையில் நேற்று சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னகரம் தொகுதி எம்எல்ஏ ஜிகே மணி ஆகியோர் அடுத்தடுத்து நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பாமக இளைஞரணித் தலைவராக முகிலன் நியமனத்தில் தொடங்கிய இந்த மோதல், கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தை எட்டியது. சென்னைக்கு அமித் ஷா வருவதற்கு ஒருநாள் முன்பாக பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி அதிர்ச்சி கொடுத்தார் ராமதாஸ்.

தந்தை vs மகன்
இதன்பின் பாமகவில் அன்புமணியின் செயல்பாடுகள், கூட்டணி முடிவில் செளமியா அன்புமணியின் தலையீடு, பாஜக உடனான நட்பு, தாயை பாட்டிலால் அடிக்க முயற்சித்தது என்று ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதுமட்டுமல்லாமல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் அன்புமணிக்கு தான் எல்லாம் என்றும் கூறினார்.
பாமக பொதுக்குழு
ஆனால் அடுத்த நாளிலேயே என் கடைசி மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன் என்றும் அறிவித்தார். இதன் காரணமாக அன்புமணி பகிரங்கமாக ராமதாஸிடம் மன்னிப்பு கோரினார். அதேபோல் மாவட்ட அளவில் பொதுக்குழுவையும் அன்புமணி நடத்தி வருகிறார். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.
சேலம், தர்மபுரி
இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்டத்திலும், மாலையில் தர்மபுரி மாவட்டத்திலும் பாமக பொதுக்குழு நடக்கவுள்ளது. அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழு என்பதால், நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், பாமகவின் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் திடீரென நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் ஜிகே மணி
இன்னொரு பக்கம் பாமகவின் கெளரவத் தலைவரும் பென்னகரம் தொகுதி எம்எல்ஏவுமான ஜிகே மணியும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு மாவட்டங்களிலும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் நிலையில், இரு மாவட்ட எம்எல்ஏ-வும் அடுத்தடுத்து நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதான் காரணமா?
ஜிகே மணி மற்றும் அருள் இருவருமே ராமதாஸ் கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். அதேபோல் தொடக்கம் முதலே ராமதாஸ் பக்கமே நின்று வருகின்றனர். ஜிகே மணி பலமுறை அன்புமணியை பார்த்து பேசி வருவதாக கூறினாலும், அவர் அன்புமணியை சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அன்புமணி கூட்டும் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்கவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாமகவின் மத்தியில் விவாதம் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications