பா.ம.க.வில் புதிய பஞ்சாயத்து... அதிமுக, திமுக ஆதரவு என ஆளுக்கொரு திசையில் பிரிந்த எம்.எல்.ஏ.க்கள்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின்(பா.ம.க.) 5 எம்.எல்.ஏக்களில் 2 பேர் அதிமுக ஆதரவாளர்களாகவும் 2 பேர் திமுக ஆதரவாளர்களாகவும் வெளிப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது பா.ம.க. இத்தேர்தலில் 5 எம்.எல்.ஏக்கள் பாமகவுக்கு கிடைத்தது.
சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைந்தது முதலே பா.ம.க.வில் ஒருதரப்பினர் மென்மைப் போக்கை காட்ட தொடங்கினர். திமுகவும் பாமக மீது சாப்ட் அப்ரோச்சை காட்டியது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம் தொடங்கி பாமகவுடன் ஒருவிதமான நெருக்கத்தை காட்டிக் கொண்டது திமுக. பாமகவும் திமுகவுடன் நெருக்கமான போக்கை காட்டிக் கொண்டது.

பாமக தனித்து போட்டி
தற்போது நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பா.ம.க. தனித்துப் போட்டி என அறிவித்தது. பா.ம.க.வின் இந்த அறிவிப்பே திமுகவுக்கு சாதகமானது என்றும் திமுக கேட்டுக் கொண்டதாலேயே பா.ம.க. இத்தகைய நிலைப்பாடு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவை உயிர்ப்பிக்க திமுக கூட்டணி வைக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. அதனை திமுகவும் ஏற்றுக் கொண்டதாம். இப்படி பரஸ்பர புரிதல்களுடன் இரு கட்சி தலைமையும் உள்ளது என்பது பகிரங்கமான ஒன்றுதான்.

அதிமுகவில் ஐக்கியம்
ஆனால் இத்தகைய நிலைப்பாட்டுக்கு எதிராக பாமக மூத்த நிர்வாகிகள் பலரும் கூண்டோடு அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திமுகவுடன் இணக்கமான போக்கை பாமக தலைமை கடைபிடிப்பதால்தான் கட்சி தாவினோம் என்றும் அவர்கள் அப்போது விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். சேலம் மாவட்டத்தில் பாமகவுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதும் மேடை ஏற மறுத்துவிட்டனராம். இத்தனைக்கும் அவர்களை மேடைக்கும் அழைத்துப் பார்த்தனர்.. ஆனால் மேடை ஏற அவர்கள் மறுத்தனர்.

முதல்வர் ஸ்டாலினுடன் ஜிகே மணி
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதால், முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் மேடை ஏறாமல் தவிர்த்திருக்கலாம் என்று சேலம் மாவட்ட திமுகவினர் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், இன்று தருமபுரி மாவட்டத்தில் நடந்த முதல்வர் நிகழ்ச்சியில், பாமக தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி கலந்து கொண்டார். அதேபோல தருமபுரி பாமக எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டார். இது, திமுகவினரை மட்டுமல்ல பாமக நிர்வாகிகளையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ஸ்டாலின் நிகழ்ச்சி புறக்கணிப்பு
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாமகவினர், திமுகவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்ததால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது பாமக தலைமைக்கு அதிர்ச்சியாகிவிட்டதாம். இதனால் திமுகவுடன் நெருக்கத்தை குறைத்து கொள்ளலாம் என தைலாபுரம் தோட்டம் ஆலோசித்து வந்ததாம். இதனை புரிந்து கொண்டுதான் சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடை ஏற மறுத்தனர் என கூறப்படுகிறது.

திமுக, அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள்
மேலும் தங்களுடைய வெற்றி என்பது எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் கொடுத்த ஆதரவால் தான் என சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் நம்புகின்றனர். அதனாலேயே அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேடை ஏற மறுத்தனராம். அதேசமயம், ஜி.கே. மணியோ, திமுக ஆட்சியின் ஆதரவு தனக்கு வேண்டும் என எண்ணுவதால் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணிக்காமல் ஒரே மேடையில் கலந்து கொண்டார். மேலும் மற்றொரு எம்.எல்.ஏ.வையும் கலந்துகொள்ள வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பக்கத்தில் ஜி.கே.மணி அமர்ந்திருப்பதன் மூலம், உள்ளாட்சி தேர்தலில் பாமகவினருக்கு ஏதோ ஒரு தகவலை அவர் சொல்கிறார். அதாவது, பாமக தனித்து போட்டியிட்டாலும் திமுகவுடன் நாங்கள் நெருக்கமாகத்தான் இருக்கிறோம் ; அதனால் தேவைப்படுகிற இடத்தில் திமுகவை தேர்தலில் ஆதரியுங்கள் என சொல்வதாக ஜி.கே.மணியின் நோக்கம் இருக்கிறது. ஆக, பாமக எம்.எல்.ஏ.க்களின் 5 பேர்களில் 2 பேர் அதிமுக ஆதரவாளர்களாகவும், 2 பேர் திமுக ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். மொத்தத்தில் பாமக தலைமையின் அரசியல் புரியாமல் தொண்டர்கள்தான் குழம்பிப் போயிருக்கிறோம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications