புகார்களை அடுக்கும் ராமதாஸ்.. அமைதியாய் அன்புமணி! மகன் பேசினால் என்னாகும்? தங்கர் பச்சான் காட்டம்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டதாகவும், தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அடுக்கடுக்கான புகார்களை ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் அன்புமணி இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. இந்நிலையில், நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது. தந்தை மகன் இடையேயான மோதல் தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கிய ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாசை கட்சியின் தலைவர் ஆக்கினார்.
அதற்கு முன்னதாகவே மத்திய அமைச்சராகவும் ஆக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சில விவகாரங்களால் தந்தை மகன் இடையே மோதல் எழுந்தது. தொடர்ந்து அந்த பிளவு அதிகமான நிலையில் தற்போது மோதலாக வெடித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் மாநாட்டுக்கு முன்னதாக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். தொடர்ந்து மாநாட்டிலும் அதற்குப் பிறகு ஊடக சந்திப்புகளிலும் அன்புமணி ராமதாஸ் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அதே நேரத்தில் ராமதாஸ் குறித்து இதுவரை அன்புமணி எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கியும் வருகிறார் ராமதாஸ். இதுவரை 150-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் பதவியில் தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் யாரோ தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்து இருக்கலாம் என ராமதாஸ் கூறியிருந்தார்.
தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் டாக்டர் ராமதாஸ் ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக தெரிவித்து இருந் நிலையில், அவர்கள் ஒட்டு கேட்கும் கருவியை சென்னைக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். மேலும் ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக பாமக சார்பாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது வீட்டின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகவும் ராமதாஸ் புகார் கூறியிருக்கிறார். இப்படியாக அன்புமணி மீது அடுக்கடுக்கான புகார்களை ராமதாஸ் கூறிவரும், நிலையில் அன்புமணி ராமதாஸ் எந்தவித விளக்கத்தையும் அளிக்காமல் இருக்கிறார். ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்களிடையே இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் மோதல் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தந்தை புகார் சொல்லும் நிலையில் மகனும் குற்றம் சுமத்தினால் நிலைமை என்னாகும் என கேள்வி எழுப்பி இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் எனும் பெருந்தன்மை இப்பொழுது புரியாமல் போகலாம்! கடந்த காலங்களில் பொறாமையினாலும் வயிற்றெரிச்சலினாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது வன்மத்தை ஊடகங்களில் கக்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் யார் யார் என்பது இம்மக்களுக்கு புரியும்!
சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த ஓநாய்கள் எல்லாம் இப்போது ஐயாவை புகழ்வது போல் புகழ்ந்து கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் மக்கள் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புறணிப்பேசி வயிறு வளர்க்கும் இத்தகைய சமூக வலைத்தளப் போராளிகளின் மானம் கெட்ட பிழைப்பு நெடுநாள் நடக்காது என்பதை காலம் விரைவில் உணர்த்தும்! காத்திருங்கள்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications