தமிழகத்தில் மே 1 முதல் மதுவிலக்கு.. மது, பீர் ஆலைகள் மூடல்! பாமகவின் நிழல் நிதி அறிக்கை வெளியீடு
சென்னை: மே 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வரவு - செலவு
2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,00,180 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,28,971 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,51,514 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.
2024-25 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.61,103 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.16,354 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.
பெரும் சரிவை நோக்கி தமிழக பொருளாதாரம்!
2023-24ஆம் ஆண்டில் சொந்த வரி வருவாய், மொத்த வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட இயலாது. அதனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
2023-24இல் தமிழக அரசு சொந்த வரி வருவாய் ரூ.1,81,182 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மாதம் வரை 13% வருவாய் குறைந்திருக்கிறது.
அதேபோல், தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூ.2,22,848 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1.90 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.37,540.45 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ள நிலையில், அரசின் வருவாய் குறைந்து செலவு அதிகரித்திருப்பதால் 15% வரை உயரும்.
தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.92,063.72 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை நெருங்கும் என்று தெரிகிறது.
2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (நிஷிஞிறி) ரூ.28.38 லட்சம் கோடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை.
2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.32 லட்சம் கோடி என்ற இலக்கை எட்ட முடியாது.
2023-24ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024-25ஆம் ஆண்டில் தமிழகப் பொருளாதாரம் சற்று அதிக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.
மதுவிலக்கு - போதை ஒழிப்பு
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடக்கம்.
மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும்.
தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.
குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம்
சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம். இனி ரூ.418க்கு சமையல் எரிவாயு கிடைக்கும்.
ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத் தொகை ரூ.1000-லிருந்து, ரூ.2000ஆக உயர்த்தப்படும்.
முதியோர் / ஆதரவற்றோர் உதவித் தொகை ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டில் 70 லட்சம் பேருக்கு முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகை வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூ.5,000 பரிசு
குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர்சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும்.
குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைத்தால், ரூ.1,000 வழங்கப்படும்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும்.
தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
மழலையர் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
ஜனவரி, ஜூலை மாதங்களில் தொகுதி - 4 பணிகளுக்கும், பிப்ரவரி மாதத்தில் முதல் தொகுதி பணிகளுக்கும், மார்ச் மாதத்தில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் அறிவிக்கைகள் வெளியிடப்படும்.
முதல் தொகுதி பணிகள் தவிர்த்து, பிற பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படும்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்
புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, நடப்பாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.
அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் கலையப்படும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications