உருப்படியா இதையாவது பண்ணுங்கப்பா.. அமைச்சர்களுக்கு வைரமுத்து சீரியஸ் அட்வைஸ்! துபாயில் சூப்பர் ஐடியா
சென்னை: துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்குள்ள கழிவு மேலாண்மை குறித்து வியந்ததோடு, வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதை போன்று செய்ய வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலக அளவில் திடக்கழிவு மேலாண்மை தான் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் நகரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேருகின்றன. அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று தரம் பிரித்து அவற்றை மேலாண்மை செய்வது அரசுகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் சேரும் நிலையில் அவற்றை வேளாண்மை செய்வது மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.
மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் ஆகியவற்றை என்ன செய்வது தெரியாமல் உலக நாடுகள் விழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் துபாயில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கும் குப்பைகளை கொட்டி அவற்றை பெரிய பெரிய மலைகளைப் போல மண்ணைக் கொண்டு மூடி வைத்திருக்கின்றனர்.
இதன் காரணமாக அவை விரைவில் மக்கி உரமாவதோடு துர்நாற்றம் இல்லாத சூழலும் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்கள் இதுபோன்ற திட்டங்களை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற அவர் துபாயின் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"
"துபாயில் இருக்கிறேன்
எனக்குப் பின்னால்
மலைபோல் தெரிவது
மலையல்ல
பதப்படுத்தப்பட்ட
துபாயின் கழிவுகளை
ஊருக்கு வெளியே கொட்டி
மண்ணிட்டு மூடிய
குப்பைமேடு
இதில்
துர்நாற்றம் இல்லை;
சுகாதாரக் கேடு இல்லை;
சுற்றுச்சூழல் மாசு இல்லை;
நாளை மக்கிய பிறகு
தாவர எருவாகும்
சாத்தியங்கள் உண்டு
வெளிநாடு செல்லும்
அமைச்சர்களும்
அதிகாரிகளும்
இதுபோன்ற உருப்படியான
திட்டங்கள் கண்டு
உள்நாட்டில்
செயல்படுத்துங்களப்பா," என பதிவிட்டுள்ளார்.

கவிஞர், பாடலாசிரியர் , சிறுகதை எழுத்தாளர். நாவல் எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்ட கவிஞர் வைரமுத்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அன்றாடம் சினிமா சார்ந்த செய்திகள் மட்டுமல்லாது அரசியல் பிரச்சனைகள் சமூக அவலங்கள் உள்ளிட்டவை குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவரை ஆயிரக்கணக்கானோர் பாலோ செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது வைரமுத்து வெளியிட்டு இருக்கும் பதிவு கவனத்தைப் பெற்று இருக்கிறது.












Click it and Unblock the Notifications