"பெத்தவளே ஒம்பெரும ஒத்தவரி சொல்லலியே".. கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்
சென்னை: தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று காலமானார். அவருக்கு திரைத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த் திரையுலகில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் வைரமுத்து. 1972 இல் இவரது முதல் கவிதை நூலான வைகறை மேகங்கள் வெளிவந்தது. சாகித்ய அகாடமி விருது, சாதனா சம்மான் விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், 7 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இந்த சம்பவம் திரைத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து எத்தனையோ பாடல்களையும், நூல்களையும், விருதுகளையும் குவித்திருந்தாலும் தனது அம்மாவுக்காக எழுதிய கவிதை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. மேடையில் அவர் கண்கலங்க தனது தாய்க்காக எழுதிய கவிதையை வாசித்தபோது ஒட்டுமொத்த ரசிகர்களுமே கண்ணீர் சிந்தியது குறிப்பிடத்தக்கது.
வைரமுத்து அம்மா கவிதை
ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!
காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?
பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு
கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்
கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா
கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்
தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!
கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே
அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே
படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!












Click it and Unblock the Notifications