உயிரைப்பறித்த விஷ சாராயம்..தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டை.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
சென்னை: விஷ சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்ததை அடுத்து சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு ஆணையிட்டுள்ளார். கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்த 6 பேர் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. காவல்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் சாராயம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டு வந்து விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஷ சாராயத்தால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த சாராய பாக்கெட்டுகளை ஆய்விற்கு அனுப்பி சோதனை செய்ததில், அதில் மெத்தனால் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து ஆறுதல் கூறினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மரக்காணம் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனிடையே கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. இதனிடையே விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். விஷ சாராய வேட்டையில் ஈடுபட மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி ஆணையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications