சீசிங் ராஜா ஃபைல்களை தூசு தட்டும் போலீசார்..கூட்டாளிகளை தட்டித் தூக்க ரெடி! சென்னையில் அதிரடி ரெய்டு
சென்னை: சென்னை காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடியான சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சீசிங் ராஜாவின் கூட்டாளிகள் குறித்த தகவல் மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த சம்போ செந்தில், சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல ரவுடிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். ஆற்காடு சுரேஷின் நண்பரான பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பில்லை என போலீசார் கூறியிருந்தனர்.
அதாவது, சீசிங் ராஜா செங்கல்பட்டு மாவட்டத்தில் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக அந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் ராஜா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று தனிப்படை போலீசார் சீசிங் ராஜாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாவை சென்னைக்கு அழைத்து வரப்பட்டதை, தொடர்ந்து நீலாங்கரை அருகே அவர் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும், அதனை காட்டுமாறு போலீசார் கூறியதாக கூறப்படுகிறது.
ஆயுதங்களை காட்டுவது போல் சென்ற சீசிங் ராஜா தப்பியோட முயன்றதாகவும் காவல் துறையினரை நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்து சீசிங் ராஜா பலியானார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை சென்னை போலிசார் மறுத்தனர். பிற வழக்குகளில் கைது செய்ய சென்ற போது தான் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகாக போலீசார் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். சீசிங் ராஜா மீது ஆறு கொலை வழக்குகள் உள்ளிட்ட 39க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் அவரது சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் போலீசாரும் வருவாய் துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
அது மட்டும் அல்லாமல் சீசிங் ராஜா யாருடன் தொடர்பில் இருந்தார்? யார் யாருக்கெல்லாம் பணம் அனுப்பி இருந்தார்? பணம் பெற்றிருந்தார்? உள்ளிட்ட ஆதாரங்களை சேகரிப்பதற்காக வில்லிவாக்கம், தாம்பரம், மேடவாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சீசிங் ராஜாவின் கூட்டணி குறித்த கூட்டாளிகள் குறித்த தகவல்களும், நிலம் தொடர்பான ஆவணங்களும் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சோதனை முடிவில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications