சின்ன மீனைப்போட்டு.. செருப்பை இலவசமாக அனுப்பி ரூ.5 லட்சம் அபேஸ்.. பலே ஆசாமிகள் கைவரிசை!
சென்னை: ஆன்லைனில் ஒரு ஜோடி செருப்பை இலவசமாக அனுப்பி வைத்து விட்டு ரூ,5 லட்சம் பறித்த மோசடி கும்பலை தேடி போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் வினோத்(28), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஆன்லைன் விற்பனை தளம் ஒன்றில் பொருட்களை வாங்க பதிவு செய்தார், பின்னர் அவரின் வீட்டுக்கு, ஒரு ஜோடி செருப்பு இலவசமாக வந்தது, இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
கடன் மோசடி என பொத்தாம் பொதுவாக பேசி... கடன் பெற்ற விவசாயிகளை கொச்சைப்படுத்தக் கூடாது -செல்லூர் ராஜூ

நீங்கள் மிகவும் அதிர்ஷடசாலி
இதனை தொடர்ந்து அந்த விற்பனை இணையதளத்தில் இருந்து பேசுவதாக கூறிய நபர் ஒருவர், ''எங்கள் நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்த நாளில் குலுக்கல் முறையில் ரூ.18 லட்சம் பரிசு உங்களுக்கு கிடைத்துள்ளது, நீங்கள் மிகவும் அதிர்ஷடசாலி. அந்த பணத்தை பெற வேண்டுமென்றால், நீங்கள் எங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்'' என்று ஒரு லிங்க் ஒன்றை அனுப்பினார்.

மோசடி கும்பல் கைவரிசை
இதனை உண்மை என நம்பிய வினோத், அந்த லிங்கை ஓப்பன் செய்து தனது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை அதில் இணைத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த மோசடி கும்பல் வினோத்தின் வங்கி கணக்கில் இருந்து, ரூ.5 லட்சத்தை சுருட்டியது. இதன்பின்புதான் அது மோசடி கும்பல் என்பதும் தான் ஏமாற்றப்பட்டதும் வினோத்துக்கு தெரிய வந்தது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார்
இதன்பின்னர் இந்த மோசடி கும்பல் குறித்து அவர் ஒட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த மோசடி கும்பல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். விசாரனையில் டெல்லியில் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்தது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

எத்தனை பேரை மோசடி செய்துள்ளனர்?
இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்கள் யார்? இவர்கள் ஏதேனும் இதுபோல் மோசடி செய்துள்ளனரா? எத்தனை பேரை மோசடி செய்துள்ளனர்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுபோல் அடிக்கடி ஆன்லைனில் மோசடி அரங்கேற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

போலீசார் எச்சரிக்கை
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் என்று கூறி பரிசு விழுந்துள்ளது என ஆசைகாட்டி அப்பாவிகளிடம் இருந்து மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பணம் பறிக்கின்றனர். எனவே இதுபோல் லிங்க் வந்தால் ஓப்பன் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.