முதல்வரிடம் ரூ.1 கோடி நிதி கொடுத்த சில நாளில்.. சேகர் ரெட்டி மீது பாய்ந்த போலீஸ் கேஸ்.. அரசு அதிரடி
சென்னை: தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண நிதி வாங்கிக்கொண்ட சில நாட்களில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கு ஒன்றில் வழக்கு பாய்ந்துள்ளது.
தொழிலதிபர்.. அதிலும் மணல் அள்ளுவதன் மூலமாக அதிக பணம் அள்ளி கோடீஸ்வரராகியவர்தான் சேகர் ரெட்டி. காட்பாடியை அடுத்த தொண்டான் துளசிதாசன் இவரது சொந்த ஊர். தமிழக அரசு ஒப்பந்தங்களில் இவருக்குத்தான் முன்னுரிமை.
கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமாக அறியப்பட்டவர். திருமலை திருப்பதியில் ஓபிஎஸ்சுடன் சேகர் ரெட்டி சேர்ந்து மொட்டை போட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

நாட்டையே பரபரப்பாக்கிய ஐடி ரெய்டு
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, மணல் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், பெட்டி, பெட்டியாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் ரூ. 34 கோடி ரூபாய் பதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. அதுவரை திரைமறைவில் காய் நகர்த்திய சேகர் ரெட்டி அப்போதுதான் நாட்டு மக்கள் மத்தியில் முதல் முறையாக அம்பலப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அமலாகத்துறை சட்ட விரோத பண பரிமாற்றத்தின் கீழ் மூன்று வழக்குகளையும், சிபிஐ மூன்று வழக்குகளையும் பதிவு செய்தன. இதைத்தொடர்ந்து அப்போது தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டதால் நாடு முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலா பிறகு ஓபிஎஸ்
ஆரம்பத்தில் சசிகலா தரப்புக்குதான் இவர் நெருக்கமாம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலாவின் நட்பு மூலமாக, அதிமுக அரசில் சேகர் ரெட்டி செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு தமிழகத்தின் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது இதற்கு நல்ல உதாரணம். அரசில் இருந்த செல்வாக்கால்தான், அரசு மணல் டெண்டர்கள் வந்து குவிந்துள்ளன. ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ்சுடன் நெருக்கமாகியுள்ளார். அதாவது அதிகாரம் எங்கே இருக்கிறதோ அங்கே ஒட்டிக்கொள்வது சேகர் ரெட்டி வழக்கம். அதிகாரத்தில் இருப்பவர்களும் இவருடன் நெருக்கம் காட்டுவது வசதியாகிவிட்டது அவருக்கு. இதன்பிறகு, திடீரென சேகர் ரெட்டி எழுதியதாக கூறப்படும் டைரி குறிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. அதில் ஓபிஎஸ் மற்றும் சில அமைச்சர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது குறித்து எழுதி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை சேகர் ரெட்டி மறுத்தார்.

தமிழக அரசிடம் செல்வாக்கு
அதேநேரம், "பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது தான் சேகர் ரெட்டிக்கு பல ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன. சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே பன்னீர்செல்வம் தான். ஓ பன்னீர் செல்வம் மீதான ஊழல் புகார்கள் முதலில் விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு விசாரணையை சந்திக்க ஓபிஎஸ் தயாரா?" அமைச்சராக இருந்த சி.வி.சண்முகமே பேட்டியளித்து பரபரப்பை எகிற வைத்தார். இதனிடையே சேகர் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் தாமதமாகத்தான் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் மீது இருந்த மூன்று முதல் தகவல் அறிக்கையில் இரண்டு வாபஸ் பெறப்பட்டன. ஒன்று நிலுவையில் இருந்தபோதே, மீண்டும், 2019ம் ஆண்டில், திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டியை மீண்டும் தமிழக அரசு பரிந்துரை செய்தது. அந்தப் பதவியை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார். அப்படியானால் சேகர் ரெட்டியின் தமிழக அரசியல் புள்ளிகளுடனான செல்வாக்கு எப்படி என்பதை புரிந்து கொள்ள முடியும்.

திமுகவில் லாபி
இந்த நிலையில்தான், தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதை 3 மாதங்கள் முன்பே புரிந்து கொண்ட சேகர் ரெட்டி, திமுகவில் சில முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களோடு நெருங்கும் அதே பழைய டெக்னிக்தான் இது. சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த திமுகவின் முக்கிய பிரமுகர், திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அவரை நன்கு கவனித்து, சிறப்பாக தரிசனம் கிடைக்க ஏற்பாடுகளை செய்துள்ளார் சேகர் ரெட்டி. அப்போதுதான், அந்த பிரமுகர், ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

ஸ்டாலினை சந்தித்த சேகர் ரெட்டி
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக பணம் வழங்குங்கள். அரசோடு நெருங்க வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார். இது ஒருபக்கம், அண்ணாநகர் லாபி இன்னொரு பக்கம் என இரு லாபிகளும் இணைந்து செயல்பட்டு ஸ்டாலினை சேகர் ரெட்டியை சந்திக்க வைத்துள்ளன. ஆனால், மரு வைத்து மாறு வேஷம் போடுவதை போல, சேகர் ரெட்டி என்ற தனது பெயரை ஜெ.சேகர் என்று குறிப்பிட்டு நன்கொடை கொடுத்துள்ளார். இந்த சந்திப்பை தமிழக அரசு தரப்பே புகைப்படமாகவும் வெளியிட்டிருந்தது. ஆனால், சேகர் ரெட்டி மீதான வழக்குகள் என்னவாகின? என்று திமுக கேள்வி எழுப்பிய நிலையில், அவரிடம் எப்படி நன்கொடை பெறலாம் என்று சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் நன்கொடை பெறுவதற்கும், அரசு நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை என்பதை ஸ்டாலின் அரசு காண்பித்துள்ளது. ஆம்.. சேகர் ரெட்டி மீது புதிதாக ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

சேகர் ரெட்டி முறைகேடு
வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.சுந்தரம் உட்பட ஏழு பேர் சேர்ந்து, காட்பாடியில் 5.88 ஏக்கர் நிலத்தை வாங்கி மனைப் பிரிவாக மேம்படுத்தினர். சதுர அடிக்கு 600 ரூபாய் என, மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வீட்டு மனைகள் சரியாக விற்பனையாகவில்லை. விற்பனையாகாத 5.27 ஏக்கர் நிலத்தை, விவசாய நிலமாக ஏழு பாகங்களாக பிரித்து தனித்தனியாக, சேகர் ரெட்டிக்கு விற்க முடிவு செய்தனர். 7 விற்பனை பத்திரங்களும், 2016ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டுமனைக்கான மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் விவசாய மதிப்பில், பத்திரப் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 13.72 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், 2.46 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

ஸ்டாலின் திட்ட வட்டம்
மதிப்பில் முரண்பாடு இருப்பதால், துணை கலெக்டர் ஆய்வுக்கு பத்திரம் அனுப்பப்பட்டது. அங்கு, தெரிவிக்கப்பட்ட மதிப்புப்படி 11.25 லட்சம் ரூபாயை முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. சந்தை நிலவரப்படியான மதிப்புடன் ஒப்பிட்டால் முத்திரைத்தீர்வை 78.76 லட்சம் ரூபாய், பதிவு கட்டணம் 11.25 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 90 லட்சம் ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு. இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் நடத்திய விசாரணையில், சேகர் ரெட்டி, துணை கலெக்டர் அப்துல் முனீர், சார் பதிவாளர் சம்பத் உள்ளிட்ட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு நிலம், வீட்டு மனையாக மேம்படுத்தபட்டு, அதற்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டபின், அதை எப்படி மீண்டும் விவசாய நிலமாக கருத முடியும்?இங்குதான் குளறுபடி நடந்துள்ளது என்கிறார்கள். ஆக மொத்தம், எந்த லாபியை சேகர் ரெட்டி உருவாக்கினாலும், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் என்பதை இந்த வழக்கு திட்டவட்டமாக காட்டுகிறது.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications