போதை மாத்திரை விற்பனை படுஜோர்.. இளைஞர்களை குறி வைத்து “வலை”.. சென்னையில் சிக்கிய கும்பல்!
சென்னை: சென்னையில் போதை மாத்திரை விற்பனை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதை மாத்திரைகள் புழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள்கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச் செல்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அண்மைக் காலமாக போதை மாத்திரைகளை அதிக அளவில் நாடி வருவதாக கூறப்படுகிறது.

ஆல்கஹால் அளவு அதிகம் உள்ள சிரப் வகை மருந்துகள், வலி நிவாரணிகள், தூக்க மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவது ஒருபுறம் இருக்க, போதை மாத்திரைகளும் புழக்கத்தில் அதிகரித்து உள்ளன.
இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போதை மாத்திரை விற்பனை கும்பல் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் சேலத்தில் போதை மாத்திரை விற்பனை கும்பல் சிக்கியது.
இந்நிலையில் சென்னையில் போதை மாத்திரை விற்பனை கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேட்டில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 5 பேர் சிக்கி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications