டிடிஎப் வாசனுக்கு இன்று அக்னி பரிட்சை.. யூடியூப் சேனல் முடங்குமா? காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரணை
சென்னை: டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை முடக்குவது தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்த மனு இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பிரபல பைக் யூடியூபரான டிடிஎப் வாசன், கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் வேகமாகவும் அபாயகரமான முறையிலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளானார். அதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன்னை விடுவிக்குமாறு டிடிஎப் வாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி, ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனுவும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. டிடிஎப் வாசன் விளம்பரத்துக்காகவும், இளைஞர்களை வேகமாக பைக் ஓட்ட தூண்டும் வகையிலும் செயல்பட்டு உள்ளது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று கூறிய நீதிபதி, அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
டிடிஎப் வாசனின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் சிறை சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அவரது யூடியூப் சேனலை மூடிவிட்டு அவரது இருசக்கர வாகனத்தை எரித்து விடும்படி கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி நவம்பர் 9 ஆம் தேதி வரை டிடிஎப் வாசனுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டு இருந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டிடிஎப் வாசன் 2 வது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்து இருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிஎப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட இயலாது எனவும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து, 3 வாரங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமின் வழங்கினார்.
இந்த நிலையில் டிடிஎப்.வாசனின் யூடியூப் சேனலை முடக்க காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. காவல்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக டிடிஎப் வாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த மனு தொடர்பாக டிடிஎப் வாசன் நவம்பர் 29 ஆம் தேதி பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். எனவே இன்று டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications