கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு தவெக முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா தப்பியோடினார்.. போலீஸ் வாதம்
சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எக்ஸ் தளத்தில் பதிவு செய்து விட்டு பின்னர் அதை நீக்கியதை ஒப்புக்கொள்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆம் என ஆதவ் அர்ஜுனா தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். கூட்ட நெரிசல் நடந்த பின் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா தப்பியோடி விட்டார் என காவல்துறை தரப்பு வாதம் வைத்தது.
கரூர் துயரச் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் தவெக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், இலங்கை, நேபாளம் போல், அரசின் அடுக்குமுறைக்கு எதிராக gen z புரட்சி ஏற்படும் எனப் பதிவிட்டிருந்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கிவிட்டார். ஆனால், இதுதொடர்பாக, கலவரத்தைத் தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக, சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, ஆதவ் அர்ஜுனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டு விட்டது. நள்ளிரவில் 34 நிமிடத்தில் பெரும்பாலானோர் பார்க்க வாய்ப்பில்லை. முதலில் நேபாளம் மற்றும் இலங்கை என்ற வார்த்தைகள் 15 நிமிடங்களில் நீக்கப்பட்டு விட்டது.
கரூர் துயரச் சம்பவத்தில் காவல்துறையினரின் மோசமான செயல்பாடுகளை சுட்டிக்காட்டவே இந்த பதிவு போடப்பட்டது. இந்த பதிவில் எந்த உள்நோக்கமும் இல்லை. புகாரை முழுமையாக கவனிக்காமல் அவசர கதியில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்படாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எக்ஸ் தளத்தில் பதிவு செய்து விட்டு பின்னர் அதை நீக்கியதை ஒப்புக்கொள்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ஆம் என பதிலளித்த ஆதவ் அர்ஜுனா தரப்பு வழக்கறிஞர், பதிவு நீக்கப்படவில்லை என்றாலும் கூட, வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. ஆதவ் அர்ஜுனா குற்றப் பின்னணி கொண்டவர் அல்ல. எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் கோபமாக சில கருத்துகளை பதிவு செய்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "செப்டம்பர் 27 ஆம் தேதி கூட்ட நெரிசல் நடந்த பின் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா தப்பியோடி விட்டார். 28 ஆம் தேதி நள்ளிரவு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. மெசேஜ்களை ஃபார்வர்டு செய்தாலே குற்றம் என தீர்ப்புகள் உள்ளன. பதிவை நீக்கி விட்டாலும் கூட 1 லட்சம் பேர் வரை அந்த பதிவைப் பார்த்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பியும், ஆதவ் அர்ஜுனா ஆஜராகவில்லை" என வாதிட்டார்.
இந்த வழக்கில் வாதம் நிறைவடையாததால், வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தரப்பில் கோரப்பட்டது. அதற்கு காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications