அரசு பள்ளி ஆசிரியரை மிரட்டுவதா? அன்பில் மகேஷ் எச்சரிக்கை.. மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது?
சென்னை: அரசு பள்ளி ஆசிரியரை அவமானப்படுத்திய மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை தாம் சும்மாவிடப் போவது இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் "என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன்” எனவும் எச்ச்சரித்துள்ளார். இதனையடுத்து அரசு பள்ளி ஆசிரியரை அவமானப்படுத்தியதாக மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யபடலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னை அசோக்நகர் அரசு பள்ளியி ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் அறிவுக்கு ஒவ்வாத, அறிவியலுக்கு முரணான பாவம் புண்ணியம், மறுஜென்மம் என்கிற பேச்சுகளை பேசியிருந்தார் மகாவிஷ்ணு என்பவர். இதற்கு அதே நிகழ்ச்சியிலேயே அரசு பள்ளி ஆசிரியரான சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அரசு பள்ளி ஆசிரியருக்கு மிரட்டல்:
ஆனால் மகாவிஷ்ணு அரசு பள்ளி ஆசிரியரான சங்கரை, நீங்க என்ன முதன்மை கல்வி அலுவலரை விட பெரியவரா? என்ன தகுதி இருக்கிறது என மிரட்டல் விடுத்து அவமானப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. சென்னை அசோக் நகர் அரசு பள்ளியை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுரை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில், மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.
தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை: இதனைத் தொடர்ந்து சென்னை அசோகர் நகர் பள்ளிக்கு இன்று சென்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அங்கு மாணவர்களிடையே பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பகுத்தறிவை வளர்க்கிற இடம்தான் பள்ளிக் கூடம். பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கக் கூடிய இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும் என்றார்.
மகா விஷ்ணு கைது?: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியிருப்பதால் அரசு பள்ளி ஆசிரியரை மிரட்டியதாக மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications