எண்ட் கேம் 2026.. எல்லாப் பக்கமும் அடி! சீனியர்களால் சிக்கலில் எடப்பாடி.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
சென்னை: கடந்த வாரம் வரை பாஜகவுடன் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என பேசி வந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது ஒத்த கருத்துடைய கட்சிகள் என இறங்கி வந்திருப்பது பாஜக அதிமுக கூட்டணிக்கான அச்சாரம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். மேலும் சீனியர்கள் சிலரின் அழுத்தத்தால் அதிமுகவில் மீண்டும் சிறு சலசலப்பு எழுந்து இருக்கிறது என்கின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை எஃகு கோட்டையாக இருந்த அதிமுக இப்போது பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என பலர் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கிறார்.

அதே நேரத்தில் ஜெயலலிதா இருந்தவரை பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் இருந்த அதிமுக அதற்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்தது. ஆனால் இரு தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது.
இதை அடுத்து தனது தலைமையில் இருக்கும் அதிமுக தனித்து செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த தேர்தல்கள் தோல்வியை மட்டுமே பரிசளித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளரை சந்தித்த அவர் அதிமுகவை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பாஜகவை வரவேற்ப்பீர்களா என்ற கேள்விக்கும் அரசியல் சூழலுக்கு தகுந்தவாறு கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறியிருந்தார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமையப் போவதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தங்கமணியும் கேபி முனுசாமியும் பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கு மழுப்பலான பதில் அளித்து சென்றனர்.
இதனால் அதிமுகவில் என்னதான் நடக்கிறது என விசாரித்தபோது சில விவகாரங்கள் தெரிய வந்தது. அதாவது கொங்கு மண்டலத்தை சேர்ந்த சில சீனியர்கள் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சொல்கிறார்களாம்.. மேலும் சசிகலா ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வெளி வந்தால் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற திட்டத்தின் பெயரிலேயே பாஜக உடனான கூட்டணி முடிவுக்கு வந்தது. ஆனால் விஜய் விவகாரத்திற்கு பிறகு திருமாவளவன் திமுகவுடன் தான் கூட்டணி என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதனால் பழைய கட்சிகளை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் திமுக ஆளும் கட்சியாக கொடுக்கும் அழுத்தம், விஜய் வரவு, பாஜக கொடுக்கும் அழுத்தம், ஓபிஎஸ் சசிகலாவின் சிக்கல், சொந்த கட்சியினர் தரும் குடைச்சல், மேலும் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு என எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத்தான் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி குறித்தான பேச்சுகள் எழுந்திருக்கிறது என்கின்றனர் அதிமுக சீனியர்கள். இதனால் 2026 தேர்தல் எல்லா சிக்கல்களையும் தீர்க்கும் எண்ட் கேமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications