பழசெல்லாம் வேலைக்கு ஆகாது.. பணமும் வேஸ்ட்.. அதிரடியாக ரூட்டை மாற்றிய கட்சிகள்.. இனிமே இப்படித்தான்!
இம்முறை சட்டசபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் சமூகவலைதளங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னை: மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறினால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும் என்பதை மக்களைவிட அரசியல் கட்சிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அதனால் தான் முந்தைய தேர்தல்களில் இருந்து வேறுபட்டு இம்முறை வித்தியாசமான யுக்தியை கையில் எடுத்திருக்கின்றன.
முன்பெல்லாம் தேர்தல் வந்துவிட்டாலே, வீட்டு மற்றும் பொது இடங்களில் உள்ள சுவர்கள் எல்லாம் வண்ணமயமாக மாறி விடும். திரும்பிய பக்கமெல்லாம் ஒவ்வொரு கட்சியும் ஓவியங்களாகவும், போஸ்டர்களாகவும் மக்களிடம் பவ்யமாக வாக்களிக்கச் சொல்லி அன்பாக வற்புறுத்தியிருப்பார்கள். செய்தித்தாள்களுடன் துணை மாப்பிள்ளையாக கட்சி விளம்பர நோட்டீஸ்கள் ஒட்டிக் கொண்டே வரும்.
ஆனால் இப்போதெல்லாம் இது குறைந்து விட்டது. அதற்குக் காரணம் எந்த கருவியின் மூலம் வாக்கு கேட்டால் அது பெருவாரியான மக்களைச் சென்றடையும் என்ற சூட்சுமத்தை கட்சிகள் அறிந்து வைத்திருப்பதுதான்.

ஆர்மிகள்
உங்களுக்கு புரிகிற மாதிரி சொல்வதென்றால், உதாரணத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். அது ஒரு சாதாரண நிகழ்ச்சி தான் என்றாலும், ஒவ்வொரு சீசனிலும் சமூகவலைதளங்களில் போட்டியாளர்களுக்கு என தனித்தனியே ஆர்மிக்கள் ஆரம்பித்து அதகளப் படுத்தி விடுகிறார்கள் நெட்டிசன்கள். ஒரு புரோமோ வெளிவந்த உடனேயே வேறு வேலையே இல்லாமல் அதற்காகக் காத்துக் கொண்டிருந்த மாதிரி கமெண்ட்களை போட்டி போட்டு வெளியிட ஆரம்பித்து விடுகிறார்கள்.

சமூகவலைதளங்களின் பங்கு
சமூகவலைதளப் பக்கங்கள் தான் போட்டியாளர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதைத் தீர்மானிக்கும் கருவியாக இருக்கிறது. போட்டியாளர் பற்றிய பிம்பத்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். அதனாலேயே பல போட்டியாளர்கள் தங்களுக்கு ஆதரவாகப் பதிவுகள் வெளியிடும்படி சம்பளத்திற்கு ஆள் வைத்த கதைகளும் உண்டு. சமூகவலைதளங்கள் தான் போட்டியாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் நடுவராக மாறி இருக்கிறது.

வைரலோ வைரல்
சரி இப்போது நாம் விசயத்திற்கு வருவோம். மற்ற ஊடகங்களை விட சமூகவலைதளங்களின் பலம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது என்பது கண்கூடாக நாம் பார்க்கும் ஒன்று. அதில் பகிரப்படும் ஒரு செய்தி பெரும்பாலும் சரியா, தவறா என்றே பார்க்கப்படாமல் கூட பல்லாயிரம் பேருக்கு உடனடியாகப் பகிரப்படுகிறது. 'வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்' என்பது மாதிரி, சோஷியல் மீடியாவில் வரும் செய்தி நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும் என பெரும்பான்மையானோர் நம்புகின்றனர்.

டிஜிட்டல் விவாத மேடை
அதனால் தான் வெள்ளம், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் கூட, தயவுசெய்து சோஷியல் மீடியாக்களில் வரும் செய்திகளை நம்பாதீர்கள் என அமைச்சர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மைக் போட்டு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. அந்தளவிற்கு சோஷியல் மீடியா என்பது மற்ற செய்தி ஊடகங்களுக்கு போட்டியாக பயம் கொள்ளும் வகையில் வளர்ந்து நிற்கிறது. வலிமை அப்டேட் கேட்டு மட்டும் அங்கே அடித்துக் கொள்வதில்லை. சமயங்களில் அரசியல் சம்பந்தமான காரசார விவாதமும் அரங்கேறுகின்றன.

புதிய தெளிவு
அதனால் தான் இம்முறை பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே டிஜிட்டல் மீடியாவை தங்களது கட்சிக்கு வாக்குசேகரிக்கும் களமாக மாற்றி இருக்கின்றன. போஸ்டர் அடித்தாலோ, நோட்டீஸ் கொடுத்தாலோ ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைத் தான் சென்றடைய முடியும். ஆனால் சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்தால் அது எல்லாதரப்பு மக்களையும் சென்று சேரும் என்ற தெளிவு கட்சிகளிடம் இருக்கிறது.

கருத்து சுதந்திரம்
எப்போதும் போனில் சமூகவலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு, எதிரில் நேரடியாக வாக்காளரே வந்து நின்றால்கூட இப்போதெல்லாம் கவனிக்க நேரம் இல்லை. ஆனால் சமூகவலைதளங்களில் லைவ் வந்தால் முகத்தை காட்டாமல், முகமூடி போட்டுக் கொண்டு மனதில் பட்டதை நேரடியாகவே துணிச்சலாகக் கேட்க முடியும். அதோடு, ஒரு கட்சியின் சாதக, பாதகங்களை பார்வையாளராக இருந்து ஒரு சேர ஒரே நேரத்தில் சமூகவலைதளங்களில் பெற முடியும்.

கட்டாயமாகிப் போன ஐடி விங்க்
உள்ளங்கைக்குள் அடங்கிப் போன உலகத்தில், பிரச்சாரத்தையும் இந்தத் தேர்தலில் புதிய வடிவில் கொண்டு சேர்க்கின்றன கட்சிகள். இதனாலேயே ஒவ்வொரு கட்சியும் தனக்கென்று தனி ஐடி விங்க் வைத்திருக்கிறது. கடந்த தேர்தல்களில் இல்லாத அளவிற்கு இம்முறை டிஜிட்டல் விளம்பரத்திற்கு கட்சிகள் செலவு செய்யும் தொகை நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் அதன் பலனும் பல மடங்காக இருக்கும் என்பதும் மறுக்க முடியாது.

டிஜிட்டல் திண்ணை
பின்ன பிக் பாஸ் போட்டியாளர்கள் ஓவியா, ஆரிக்கே கோடியில் ஓட்டுப் போட்டவர்கள் ஆயிற்றே நம் மக்கள். அவர்களை நம்பி டிஜிட்டல் திண்ணையில் அமர்ந்து வாக்கு கேட்கும் வேட்பாளர்களை வெறும் கையோடு அனுப்பி விடுவார்களா என்ன? சமூகவலைதளங்களை நம்பினோர் கைவிடப்படார்...!












Click it and Unblock the Notifications