பாஜக பக்கம் வீசும் ’பனையூர்’ காற்று.. டெல்லியில் டீல் பேசிய தவெக புள்ளி! விஜயத்துக்கு தயாரான விஜய்!
சென்னை: கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல்வேறு 'மாற்ற' காற்று வீச தொடங்கி இருக்கிறது. கொள்கை எதிரி என பாஜகவை விஜய் விமர்சித்தாலும் தற்போது விஜய்க்கு பின்னணியில் பாஜக தான் உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முதல் கட்சியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது, அண்ணாமலை உள்ளிட்டோரின் அடுத்தடுத்த பேட்டிகள், பாதுகாப்பு அதிகரிப்பு என பாஜக விஜய்க்கு ஆதரவாகவே பாஜ செயல்படுகிறது எனவும், இது 2026 தேர்தலில் எதிரொலிக்கலாம் என சொல்லப்படுகிறது.
த.வெ.க. தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்ளது. மேலும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவையும் அமைத்து உத்தரவிட்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கரூர் சம்பவத்தில் இருந்தே விஜய் மீது கரிசனம் காட்டி வருகிறது பாஜக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கரூர் கூட்ட நெரிசல்
சம்பவம் நடந்த உடனே கரூருக்கு வரைந்த பாஜக தலைவர்கள் திமுக அரசு மீதுதான் குற்றம் இருக்கிறது எனவே பேசி வந்தனர். நயினார் நாகேந்திரன் அண்ணாமலை தொடங்கி, கட்சியின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கரூர் சம்பவம் தொடர்பாக ஹேமமாலினி எம்பி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை என்டிஏ கூட்டணி அமைத்து கரூருக்கு அனுப்பி வைத்தது. இந்த குழுவில் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் இடம்பெற்ற நிலையில் கரூரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கண்ட பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
விஜய் அரசியல்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹேமமாலினி, விஜய் மீது தவறு இல்லை, தமிழக அரசு மீதும் காவல்துறையின் மீதும் தான் தவறு இருப்பது போல பேசி இருந்தார். இப்போதும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரும் விஜய் மீது தவறில்லை என்ற தொனியிலேயே பேசி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என பல மாதங்களாகவே பாஜகவினர் கூறி வருகின்றனர்.
பாஜக கூட்டணி
ஆனால் கொள்கை எதிரி பாஜக தான் என திட்டவட்டமாக கூறியுள்ள விஜய் பாஜக கூட்டணிக்கு செல்ல போவதில்லை என சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் கரூர் சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதனை வைத்து விஜயை காப்பாற்றி, 2026 தேர்தலுக்கு கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் மேலும் சில கூடுதல் தகவல்களும் வெளியாகி இருக்கிறது. அதாவது ஆதவ் அர்ஜுனா டெல்லியில் பாஜக தலைவர் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே முகாமிட்டிருந்ததாகவும், அதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தில் இருந்து பாஜக ஆதரவு பத்திரிகையாளர் ஒருவர் செய்ததாக சொல்லப்படுகிறது.
அரசியல் மாற்றம்
மேலும் கரூர் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே விஜயின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டதோடு அவருக்கு வழங்கப்பட்டு வரும் ஒய் பிரிவு பாதுகாப்பை இசட் பிரிவு பாதுகாப்பாக மாற்றலாம் எனவும் சொல்லப்படுகிறது. இப்படியாக கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒவ்வொரு நகர்வையும் விஜய்க்கு ஆதரவாகவே பாஜக எடுத்து வைத்து வருகிறது. இதனால் கொள்கை எதிரி என பாஜகவை விஜய் குறிப்பிட்டு இருந்தாலும், திமுகவை அகற்ற வேண்டும் என்ற கொள்கைக்காக கூட்டணியில் சேர்ந்து இருக்கிறார் என கூறி சமாளித்து விடலாம்.. 2026 தேர்தலில் பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது உறுதி என்கின்றனர் நம்மிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications