200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கோட்டை யாருக்கு? அறிவாலயத்திற்கா? அல்லது இரட்டை இலை மீண்டு வருமா? இல்லை, விஜய்யின் 'தவெக' (TVK) ஆட்டத்தை மாற்றியமைக்குமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் சென்னை டீக்கடை முதல் டெல்லி லாபி வரை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், இப்போது 'பாலி மார்க்கெட்' (Poly Market) எனப்படும் சர்வதேச பெட்டிங் சந்தையில் தமிழக தேர்தல் குறித்த கணிப்புகள் தீயாய் பரவத் தொடங்கியுள்ளன.

'ஸ்வீப்' அடிக்கும் உதயசூரியன்!
உலகளாவிய வர்த்தகர்களும், அரசியல் கணிப்பாளர்களும் கூடும் இந்த 'பாலி மார்க்கெட்' தளத்தில், 2025-ன் இறுதியிலிருந்தே திமுக-வின் கை ஓங்கி வருவதாக தகவல்கள் கசிகின்றன. "திமுக 200 இடங்களைத் தொடும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் போட்டு வரும் கணக்கு, நிஜமாகவே 'இம்ப்ளைடு ப்ராபபிலிட்டி' (Implied Probability) அடிப்படையில் பலமாக இருக்கிறதாம்.
கடந்த கால தேர்தல்களில் திமுக காட்டிய தொடர் ஆதிக்கம், சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள், மற்றும் வலுவான கூட்டணி பலம் ஆகியவைதான் இந்த சர்வதேச சந்தையின் நம்பிக்கைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. "திமுக-வுக்கு இது வெறும் வெற்றி அல்ல, ஒரு 'கிளீன் ஸ்வீப்' (Sweep) வெற்றியாக இருக்கும்" என்று மார்ச் 2026-ன் தொடக்க வாரத்தில் சந்தை நிலவரங்கள் கூச்சலிடுகின்றன.
கலக்கத்தில் சென்னை... எகிறும் எக்ஸ்-காரணி!
இந்த பாலி மார்க்கெட் ரிப்போர்ட் அறிவாலயத் தரப்புக்கு குஷியைத் தந்தாலும், ஒரு சின்ன 'ட்விஸ்ட்' இருக்கத்தான் செய்கிறது. வட சென்னை முதல் தென் சென்னை வரை, சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் 'பாலி மார்க்கெட்' கிராப் (Graph) அவ்வப்போது கீழ் நோக்கிச் சரிகிறது.
காரணம்? புதிதாக களம் இறங்கியிருக்கும் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்'. குறிப்பாக சென்னை மற்றும் நகர்ப்புறங்களில் விஜயின் தாக்கம் திமுக-வின் வாக்கு வங்கியில் கைவைக்கலாம் என்று சில புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
"பாலி மார்க்கெட் கணிப்பு என்னவோ திமுக-வுக்கு சாதகம்தான். ஆனால், களத்தில் 'விஜய் கொடுக்கும் டஃப் பைட், சில இடங்களில் கணக்கை மாற்றலாம்" என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அது என்ன பாலி மார்க்கெட்?
பாலி மார்க்கெட் (Polymarket) என்பது பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் உலகின் மிகப்பெரிய 'கணிப்புச் சந்தை' (Prediction Market) தளமாகும். இது ஒரு சாதாரண பெட்டிங் தளம் கிடையாது; மாறாக, நிஜ உலகில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், விளையாட்டுப் போட்டிகள், பொருளாதார நகர்வுகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் முடிவுகளை மக்கள் தங்கள் அறிவாற்றலைக் கொண்டு கணித்து, அதன் மேல் முதலீடு செய்யும் ஒரு வர்த்தகத் தளமாகும். இங்கு ஒவ்வொரு நிகழ்வும் ஒரு 'ஆம்' (Yes) அல்லது 'இல்லை' (No) என்ற ஒப்பந்தமாக (Contract) மாற்றப்படும்.
ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தால், அந்த ஒப்பந்தத்தின் விலை 100 காசுகளை (Cents) நோக்கி உயரும்; வாய்ப்பு குறைவாக இருந்தால் விலை குறையும். இந்த விலையேற்றமே அந்த நிகழ்வு நடப்பதற்கான 'மக்களின் கணிப்பு சதவீதம்' (Implied Probability) என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழகத் தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறும் என 80 காசுகள் விலை இருந்தால், அந்த கட்சி வெற்றி பெற 80% வாய்ப்பு இருப்பதாகச் சந்தை கருதுகிறது என்று அர்த்தம். துல்லியமான தரவுகள் மற்றும் மக்களின் ஒட்டுமொத்த கருத்துக்களை (Wisdom of the Crowd) பிரதிபலிப்பதால், செய்தி ஊடகங்களை விடவும் இந்தத் தளம் பல நேரங்களில் துல்லியமான கணிப்புகளை வழங்குவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது கிரிப்டோகரன்சி மூலம் இயங்குவதாலும், சூதாட்டத் தன்மையைக் கொண்டிருப்பதாலும் பல்வேறு நாடுகளில் சட்டரீதியான விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
அதிமுக-வின் மவுனம்... பாலி-யின் கணிப்பு!
எதிர்க்கட்சியான அதிமுக, கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டிருந்தாலும், பாலி மார்க்கெட் முதலீட்டாளர்கள் இன்னும் அவர்கள் மீது பெரிய அளவில் பந்தயம் கட்டத் தொடங்கவில்லை. "சிதறிய எதிர்க்கட்சிகளால் வாக்குகள் பிரிவது திமுக-வுக்கே சாதகம்" என்பதுதான் இந்த மார்க்கெட் சொல்லும் கசப்பான உண்மை.
"வெளிநாட்டு சந்தையில் என்னதான் பெட்டிங் கட்டினாலும், ஓட்டுப் போடுவது நம் ஊர் ஜனங்கதான். ஜூன் 2026-ல் பாலி மார்க்கெட் ஜெயிக்கிறதா அல்லது மக்களின் 'பவர்' ஜெயிக்கிறதா என்று தெரிந்துவிடும்!" என முடித்தார் .












Click it and Unblock the Notifications