பொன் மகன் சேமிப்பு திட்டம்: ஆண் குழந்தைகளுக்கான அசத்தலான அஞ்சல் சேமிப்பு! வட்டி, வருமான வரி நன்மை
சென்னை: ஆண் குழந்தைகளின் கல்வி மற்றும் நிதி தேவைகளை கருத்தில் கொண்டு தனித்துவமான சேமிப்பு திட்டம் தான் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் குறித்து சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய செய்தி வெளியாகியிருந்ததுபோல, தற்போது நீலகிரி மாவட்டத்திலும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அது என்ன தெரியுமா?
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தைப் போலவே, ஆண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பொன்மகன் திட்டம் “பொன்மகன் சேமிப்பு திட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த தொகையை ஒரே முறையாகவோ அல்லது மாதாந்திரமாகவோ செலுத்தும் வசதி உள்ளது. சேமிப்பு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலம் முடிந்த பின்னர் விரும்பினால் மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பொன் மகன் சேமிப்பு திட்டம் - நன்மைகள், வசதிகள்
சேமிப்பைத் தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, கணக்கில் உள்ள தொகையின் 50 சதவீதத்தை முன்கூட்டியே எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. மேலும், சேமிப்புக் கணக்கு தொடங்கி குறைந்தது 3 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், அதனை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறும் வசதியும் உண்டு. ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே இந்த கடன் வசதியைப் பயன்படுத்த முடியும்.
முதிர்வு காலம் முடிந்த பிறகு, குழந்தை 18 வயதை பூர்த்தி செய்திருந்தால், முதலீடு செய்யப்பட்ட தொகையும் அதற்கான முழு வட்டியும் நேரடியாக அந்த ஆண் குழந்தைக்கே வழங்கப்படும். கணக்கு வைத்திருக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இறந்துவிட்டால், குழந்தை மேஜர் வயதை எட்டியிருந்தால் தொகை குழந்தைக்கே வழங்கப்படும், இல்லாவிட்டால் குழந்தையின் கார்டியனுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் தமிழகத்தில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மட்டுமே இணைய முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இந்த திட்டத்தில் சேர அனுமதிக்கப்படவில்லை.
தகுதிகள் - ஆவணங்கள்
10 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளின் சார்பில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கைத் தொடங்கலாம். 10 வயதை நிறைவு செய்திருந்தால், ஆண் குழந்தை தானாகவே கணக்கைத் தொடங்க முடியும். இதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், புகைப்படம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார், பான் மற்றும் முகவரி சான்றிதழ்கள் அவசியமாகும்.
பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் நிலையானது அல்ல; இது மத்திய அரசு மற்றும் அஞ்சல் துறை அவ்வப்போது அறிவிக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் மாற்றம் பெறக்கூடியதாகும். தற்போது நடைமுறையில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு முதிர்வுத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, கணக்கு தொடங்கும் நேரத்தில் அஞ்சல் நிலையத்தில் அமலில் உள்ள துல்லியமான வட்டி விகிதத்தை உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.
வருமான வரி - அஞ்சலக சேமிப்பு
அதேபோல், இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை செய்யப்படும் முதலீட்டிற்கு வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கலாம்.. எனினும், வரி தொடர்பான நன்மைகள் குறித்த தகவல்களும் கணக்கு தொடங்குவதற்கு முன்பு சமீபத்திய அரசு மற்றும் வருமான வரித்துறை அறிவிப்புகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.. அதில் "பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 10 வயதை பூர்த்தி செய்த சிறுவர்கள் தாங்களாகவே கணக்கை தொடங்கி பராமரிக்கவும் முடியும்.
மாத வட்டி வீதம்
மாதம் ரூ.1,000 வீதம் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், மொத்தமாக ரூ.1.80 லட்சம் முதலீட்டிற்கு சுமார் ரூ.1.35 லட்சம் வட்டி கிடைத்து, முதிர்வு காலத்தில் முதலீடு மற்றும் வட்டி சேர்த்து ரூ.3.14 லட்சம் வரை பெற முடியும். ஆண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் முக்கிய செலவுகளுக்கு இந்த திட்டம் பாதுகாப்பான சேமிப்பாக அமையும்" என்று அஞ்சல் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்திலும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதில், "நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் குழந்தைகளின் எதிர்கால நலன் மற்றும் கல்வித் தேவைகளை உறுதி செய்யும் நோக்கில், அஞ்சல் துறை 'பொன்மகன் சேமிப்புத் திட்டத்தை' தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
அஞ்சலகங்கள் அறிவுறுத்தல்
இந்தத் திட்டத்தின் லாபத்தைப் பார்க்கும்போது, ஒரு நபர் மாதம் 1,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12,000 ரூபாயை இத்திட்டத்தில் முதலீடு செய்தால், 15 ஆண்டுகள் முடிவில் அவர் செலுத்திய மொத்தத் தொகையான ரூ.1,80,000க்கு, வட்டியாக மட்டுமே ரூ.1,35,572 கூடுதலாகக் கிடைக்கும். இதன் மூலம் முதிர்வு காலத்தில் மொத்தமாக ரூ.3,14,572 வரை கிடைக்கும்.
அரசு வழங்கும் பாதுகாப்பான முதலீடு என்பதோடு, வங்கிகளை விடச் சிறந்த வட்டி விகிதத்தையும், வருமான வரி விலக்குப் பலன்களையும் இத்திட்டம் கொண்டிருக்கிறது. எனவே, நீலகிரி மாவட்ட மக்கள் தங்கள் ஆண் குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications