பொங்கல் தொகுப்பில் பணம் பரிசு.. தமிழக பயனாளிகளுக்கு 1 கிலோ வெல்லம், நேரடி கரும்பு கொள்முதல் கோரிக்கை
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது, கரும்பு விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.. வியாபாரிகளிடம் மட்டும் கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளிடமும் உரிய விலைக்கு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளது.
பொங்கல் ரொக்க பணத்துடன், 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22 ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தவிர, 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டி, 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை
வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கரும்புகளை தமிழக அரசு கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த வருடம் ஒரு கட்டு ரூ.250க்கு விலைபோன நிலையில் இந்தாண்டு ரூ.350க்கு மேல் விலையை எதிர்ப்பார்த்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தபடி உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், குடும்பத்திற்கு 2 கரும்பு வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகைக்காக விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பு விவசாயத்தில் உழவர்களுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டும் அன்புமணி, அரசு நிர்ணயிக்கும் விலை முழுமையாக உழவர்களுக்கு கிடைக்காததற்கு காரணம், நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள்தான் என்கிறார்.
அதுமட்டுமல்ல., இடைத்தரகர்கள் விலை குறைத்துவிடுவதால் மற்றும் குறைந்த உயரம் கொண்ட கரும்புகள் நிராகரிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறும் அன்புமணி, இதுகுறித்து முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார்..
பன்னீர் கரும்புகள்
அதில், "ஒரு ஏக்கருக்கு செலவு ரூ.2.25 லட்சம், வருமானம் ரூ.3.25 லட்சமாக இருந்தாலும், நில குத்தகை, நீர், வட்டி செலவுகளைக் கழித்த பிறகு உழவர்களுக்கு லாபம் இல்லை. இடைத்தரகர்கள் ஒரு கரும்புக்கு ரூ.17-20 லாபம் பெற்று, மொத்தம் ரூ.45 கோடி வருமானம் பகிர்ந்துக்கொள்கின்றனர்,
எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு கரும்புகள் வழங்கப்பட வேண்டும், கொள்முதல் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட வேண்டும், மற்றும் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை அன்புமணி விடுத்துள்ளார்..
இதே கோரிக்கையைதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெளிப்படுத்தி உள்ளது.. அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்கள்
அந்த அறிக்கையில், "தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை, கரும்பு) தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
1 கிலோ வெல்லம் - பணம் பரிசு
இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதையொட்டி பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டுமெனவும், கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளன
எனவே, இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கிலோ வெல்லம் வழங்கிடவும், அதேபோல கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என்று கேட்டுக் கொண்டுள்ளார்..












Click it and Unblock the Notifications