பொங்கல்: சென்னை புறநகர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்.. நோட் பண்ணுங்க
சென்னை: பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொது விடுமுறை நாள் என்பதால் சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் போக்குவரத்துக்கும் பெரிதும் உதவிகரமாக இருப்பது மின்சார ரயில் சேவை. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் பிரதான நேரங்களில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டாலும் மொத்த சென்னையே ஸ்தம்பித்துவிடும் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பயணிகளுக்கு முக்கியப் போக்குவரத்து வசதியாக உள்ளது. கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் என பலரும் மின்சார ரயில் சேவையை தான் நம்பியிருக்கிறார்கள். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
வார நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொது விடுமுறை என்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 14 ஆம் தேதியான பொங்கல் பண்டிகை தினத்தன்று புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்கப்படும் கால அவகாசத்தின்படி இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications