பொங்கல் பரிசு.. இன்று அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் இலவச வேட்டி மற்றும் அதே எண்ணிக்கையில் இலவச சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன்களை ரேஷன்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்.
நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 224 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி - சேலைகள் வழங்கும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது.. கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித்துறையை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற வேண்டும் என்பதற்காக, வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த.மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழர் திருநாளாம் தை பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், முதல்-அமைச்சர், அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டு உள்ளது.
அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications