பொன்முடி வழக்கு.. தமிழக டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி.
அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமர்வு மீண்டும் அதே விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை. அமைச்சரின் முழுமையான பேச்சை கேட்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து அமைச்சர் உள் அரங்கத்தில் பேசிய விவகாரம் தான் இது" என்று வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி, "தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துகள், இரு சமயத்தினரின் மனதை புண்படுத்தியுள்ளது. அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது. இந்தப் பேச்சுக்காக அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிஷ்டவசமானது என்றார்.
மேலும், ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, அதனை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க டிஜிபி மற்றும் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications