ஓபிஎஸ் காலில் விழுந்து எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பொன்னையனுக்கு பாதுகாப்பு தேவை- புகழேந்தி
சென்னை : விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும் என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பொன்னையன் பேசியதாக வெளியான ஒரு ஆடியோவால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ந்து போயுள்ளது. இந்த விவகாரத்தை ஓபிஎஸ் தரப்பு கையில் எடுத்து ஈபிஎஸ் தரப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆடியோ லீக்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் அதிமுக பிரமுகர் நாஞ்சில் கோலப்பன் என்பவரிடம், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் போனில் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த ஆடியோவில் பேசுவது தான் இல்லை என்றும், தன்னைப் மிமிக்ரி செய்யப்பட்டது என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார். அதில் மறுமுனையில் பேசியதாக கூறப்படும் நாஞ்சில் கோலப்பன், போனில் பேசியது தானும், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் தான் எனத் தெரிவித்துள்ளார்.

ரகசியங்கள்
அந்த ஆடியோவில், கட்சி, ஒரு கோடீஸ்வரனிடம் இருந்து மற்றொரு கோடீஸ்வரன் கையில் செல்கிறது. அவரவர் பணத்தைப் பாதுகாக்க, டெல்லியை பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர்.
இப்போது தங்கமணி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஸ்டாலினிடம் ஓடுகிறார். கே.பி.முனிசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார், அவர், துரைமுருகனை பிடித்து கிரானைட் குவாரி உரிமம் வாங்கியுள்ளார் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிமுக ரகசியங்கள் பேசப்படுகின்றன.

திருட்டு பசங்க
சி.வி.சண்முகம் பகலிலேயே குடித்துக் கொண்டிருப்பார். அவர் கையில், 19 வன்னியர் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சாதி அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் இருப்பதால், அவர்கள் பின்னால் பழனிசாமி தொங்குகிறார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 42 எம்.எல்.ஏக்களில், ஒன்பது பேர் மட்டுமே ஈபிஎஸ் கையில் உள்ளனர். மீதி பேரை வேலுமணி, தங்கமணி கையில் வைத்துள்ளனர். இருவரும் திருட்டு பசங்க. எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவி வேண்டும் என்பதற்காக, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என பேசப்படுகிறது. இந்த ஆடியோவால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னையன் வாழ்க
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசுகையில், "பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் நடந்த பணக் கொள்ளையையும், சாதி வெறியையும் கூறிவிட்டார் பொன்னையன். பொன்னையன் வாழ்க. எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து உள்ளது. சொந்த சாதிக்காரர்களாலேயே அவருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

பல ஆடியோக்கள் வரும்
மேலும், விரைவில் இன்னும் பல ஆடியோக்கள் வெளிவரும். ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம். கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்ற ஒரு சிலரால் எடப்பாடி பழனிசாமிக்கு அழிவு வந்துவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி உள்பட அவர் பக்கம் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications