கடவுளே! டிஐஜி விஜயகுமார் நிலை வேறு அதிகாரிக்கு வரக் கூடாது.. ஜெயலலிதாவின் நிழல் பூங்குன்றன் வேதனை
சென்னை: கோவை டிஐஜி விஜயகுமாரின் வாழ்க்கை முடிவு வேறு எந்த காவல் துறையினருக்கும் வரக் கூடாது என கடவுளிடம் பிரார்த்திப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை சரக டிஐஜியாக இருந்த விஜயகுமார் நேற்றைய தினம் முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மிகவும் நேர்மையான, துணிச்சலான அதிகாரி இப்படி திடீரென தற்கொலை செய்துக் கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவருடைய இறப்புக்கு பலர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- இது பேசும் படம் அல்ல, மனதை பிசையும் படம். பல கோடிகளில் இருந்து ஒருவராய் தேர்ந்தெடுக்கப்பட்டு, காவல்துறைக்கு தன்னை அர்ப்பணித்து, நாட்டுக்காக இன்னும் நிறைய செயல்களை செய்ய வேண்டியவர் இன்று தன்னை இழந்திருப்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது. முகநூலில் இவருடைய மறைவிற்காக பலர் வருந்துவதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழாமல் எப்படி இருக்க முடியும்..!
நேர்மையானவர், எளிமையானவர், காவல்துறைக்கு பேரிழப்பு என்று குறிப்பிடப்படும் இவருடைய வாழ்க்கை முடிவு இன்னொரு காவல் துறையினருக்கு வரக்கூடாது என்பதே எனது விருப்பம். அதற்காக நான் இறைவனிடம் மன்றாடுகின்றேன். விடுமுறை கிடைக்காமல், குடும்பத்தினரோடு நேரத்தை கழிக்காமல், மன அழுத்தத்தோடு நாட்டு நலனுக்காக போராடும் காவல் துறையினரை வணங்குகிறேன்.
எனக்கு இவரோடு பழக்கம் இல்லை என்றாலும் மற்றவர்களின் பதிவை பார்த்து நானும் பதிவு போடும் அளவிற்கு உந்தப்பட்டிருக்கின்றேன் என்றால், இவர் சிறப்பான அதிகாரி, இவருடைய மறைவு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது என்பதே இவர் வாழ்ந்ததின் அர்த்தம்..! என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications