"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" பாடலை எழுதிய பூவை செங்குட்டுவன் காலமானார்.. என்ன நடந்தது?
சென்னை: பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 90 வயதால்கும் அவர் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப் பாடல்களையும், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை வசனங்களையும் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, தாயிற் சிறந்த கோவிலும் இல்லை உள்ளிட்ட பாடல்கள் இப்போதும் கேட்கப்பட்டு வருகின்றன.
பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 90 வயதாகும் பூவை செங்குட்டுவன், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்கள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப் பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி இருக்கிறார்.

1967ஆம் ஆண்டு முதல் பாடல்கள் எழுதி வரும் இவர், சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர். இவரின் நிஜப் பெயர் முருகவேல் காந்தி. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என்று மாற்றிக் கொண்டவர். புதிய பூமி, அகத்தியர், கந்தன் கருணை, கற்பூரம் உள்ளிட்ட படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.
அதிலும் எம்ஜிஆருக்கு எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்ற பாடல் ஒவ்வொரு அதிமுக மேடைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை பாடல் இப்போதும் அதிகமானோரால் ரசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா பாடல் முருக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, மகாகவி பாரதியார் விருதைப் பெற்றவர். சென்னை பெரம்பூர் ரமணா நகரில் பூவை செங்குட்டுவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு பூவை தயா, ரவிச்சந்திரன் என்று இரு மகன்களும், கலைச் செல்வி, விஜய லக்ஷமி என்று இரு மகள்களும் உள்ளனர். இவரது மறைவையொட்டி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications