Karur Koduram: 41 பேர் உயிர்கள் போச்சே! விஜய்யை கைது செய்யணும்! கரூரில் போஸ்டர்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் விஜய் கூட்டத்திற்கு சென்ற 41 பேர் இறந்த நிலையில் அவரால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூட ஆறுதல் சொல்ல அவர் வரவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை இரவு தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சுவிட முடியாமல் தவித்து மயங்கி விழுந்தனர்.

மயங்கியவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றியும் சம்பவ இடத்திலும் 10 குழந்தைகள் உள்பட 41 பேர் மரணமடைந்துவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்ததும் விஜய் அங்கிருந்து புறப்பட்டு கரூர் மருத்துவமனைக்கு செல்வார் என்றும் அவரது கட்சி நிர்வாகிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என நினைத்த நிலையில் அதிர்ச்சி சம்பவமாக விஜய்யும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அடித்து பிடித்து சென்னை வந்து சேர்ந்தனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் 41 பேர் மரணமடைந்ததற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் அவர் அந்த கூட்டம் கலையக் கூடாது என்பதற்காக பல இடங்களில் அவர் முகத்தை காட்டாமல் ஷட்டரை மூடிவிட்டு தனது பேருந்தை பொதுமக்கள் நின்றிருக்கும் பகுதியில் நிறுத்தி பேச ஆரம்பித்தார்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழக்க காரணமாகிவிட்டது. அவர் மட்டும் சொன்னது போல் கரூருக்கு 12 மணிக்கு வந்திருந்தால், இந்த இறப்புகளை தவிர்த்திருக்கலாம். போலீஸிடம் மாலை 3 மணி முதல் 10 மணி வரை என நேரம் கேட்டுவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகல் 12 மணிக்கு கரூர் வருவதாக விஜய் தெரிவிக்காதிருந்திருந்தாலும் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்கிறார்கள்.
இத்தகைய சம்பவங்கள் நடந்து இன்னமும் நீலாங்கரை வீட்டை விட்டு விஜய் வெளியே வராமல் இருப்பது உண்மையான அரசியல்வாதிகளுக்கு அழகல்ல என்கிறார்கள். மேலும் இந்த சம்பவத்தால் உயிரிழந்த மக்களுக்கு தலா ரூ 20 லட்சம் வழங்குவதாகவும் விஜய் அறிவித்திருக்கிறார். ஆனால் எத்தனை இழப்பீடுகள் கொடுத்தாலும் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வர முடியுமா? என்ற கேள்வியை பாதிக்கப்பட்டவர்கள் எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில் விஜய்யை கைது செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாணவர்கள் சங்கம் சார்பில் கரூர், சேலம், நாமக்கல் பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
பொதுவாகவே மக்களை சந்திப்பதை விஜய் விரும்பமாட்டார். அரசியல் என்றாலே மக்களுடன் மக்களாக பழக வேண்டும். இதை விஜய் போன்ற நபர்கள் செய்வது கஷ்டமே. குறைந்தபட்சம் கரூர் மக்களின் துக்கத்தில் பங்கேற்க இறந்த சடலங்களையாவது பார்க்க சென்றிருக்கலாம். விஜய்யை பார்த்துவிட்டுதான் வருவேன் என நிறைய பேர் சொல்லிவிட்டு சென்றிருந்தனராம். குறைந்தபட்சம் அவர்களின் உடல்களை பார்க்க போயாவது கடைசி ஆசையை நிறைவேற்றியிருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications