இருளில் மூழ்கிய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை! 3 மணி நேரத்திற்கு பின்னர் சீரான மின் விநியோகம்
சென்னை: சென்னையின் பிரதான மருத்துவமனைகளின் ஒன்றான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு பிளாக் கட்டிடத்தில் சுமார் 3 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மின்வெட்டு சரி செய்யப்பட்டிருக்கிறது.
தினமும் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை இருக்கிறது. குறிப்பாக மகப்பேறு பிரச்சனைகளுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சையை மருத்துவர்கள் இங்கு கொடுத்து வருகின்றனர். இதற்காக என தனியாக புதிய கட்டிடம் ஒன்றும் சமீபத்தில் திறக்கப்பட்டிருந்தது. எனவே மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், சில சமயத்தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் கூட இந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. நோயாளிகளின் வசதிக்காக புதிய கட்டிடங்கள் மருத்துவமனைக்கு உட்பட இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக கட்டுமான பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.
இப்படி இருக்கையில் கடந்த 3 மணி நேரத்திற்கு முன்னதாக மருத்துவமனையின் மெடிக்கல் பிரிவு 7 மாடி கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 3 மணி நேரம் ஆன பின்னரும் கூட மின்சாரம் வழங்கப்படாததால் நோயாளிகள், மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனைக்கு அருகில் நடக்கும் கட்டுமான பணிகளின்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டதாகவும் அதனால் மின்தடை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்வெட்டு குறித்து நோயாளிகளும், உறவினர்களும் புகார் எழுப்பிய நிலையில், தற்போது மின்வெட்டு சரி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கோடைக்காலங்களில் மின்தடை மிக இயல்பானதாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. டெல்டா மாவட்டங்களின் கிராமப்பகுதிகளில் 1-3 மணி நேரம் வரை தினமும் மின் வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
இதையெல்லாம் கவனித்தில் கொண்டு தமிழ்நாடு மின்வாரியத்துறை உரிய நடவடிக்கை எடுத்து மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications