"ஆந்திரா, பீகார் பட்ஜெட் வந்துடுச்சு.. மற்ற மாநில மக்கள் அல்வா சாப்பிடுங்க”.. பிரகாஷ்ராஜ் கிண்டல்!
சென்னை: "ஆந்திரா, பீகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்” எனப் பதிவிட்டு, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை விமர்சித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஆமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உற்பத்தி, வேலை வாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 துறைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான மூன்று திட்டங்களை அரசாங்கம் தொடங்கும் என்றும் அறிவித்தார். அனைத்து துறைகளிலும் புதிதாக பணியில் சேரும் அனைத்து நபர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை அரசு வழங்கும். இபிஎப்ஓவில் பதிவு செய்து முதல் முறையாக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். மேலும் 1 கோடி இளைஞர்கள் பணி அனுபவம் பெறும் வகையில் உதவித்தொகையுடன் கூடிய இண்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் ஆந்திரா, பீகாருக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்துக்கு பல சாலை திட்டங்கள் வரவுள்ளன. ரூ. 26,000 கோடி ரூபாய் பீகார் மாநிலத்தில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்தர் வரை புதிய பொருளாதார வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திராவின் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திராவில் தலைநகர் நிறுவ நிதி சார்ந்து, ரூ. 5000 கோடி ஒதுக்கப்படும்” என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாக இருக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் சமூக வலைதளத்தில் பட்ஜெட் குறித்து பதிவிட்டுள்ளார். ஆந்திரா, பீகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள் என கிண்டலாக பதிவிட்டு பட்ஜெட்டை விமர்சித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ், தொடர்ச்சியாக பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறார். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகளுக்கு நிகராக தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.
துணிச்சலாக தனது அரசியல் கருத்துக்களை பொது வெளியிலும் சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்தி வரும் காரணத்திற்காக பிரகாஷ் ராஜ் பாஜக ஆதரவாளர்களால் சமூல வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட அவர் அந்த தேர்தலில் மொத்தம் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். ஆனாலும், பாஜக மீதான தனது விமர்சனத்தை அவர் தொடர்ந்து வைத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications