விஜய் வெறும் டயலாக் மட்டும் தான்.. தெளிவான அரசியல் பார்வை இல்லை.. விளாசிய பிரகாஷ் ராஜ்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வையோ, மக்கள் பிரச்சனைகள் குறித்த புரிதலோ இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் கருத்துகளை தெரிவித்து வரும் பிரகாஷ் ராஜ், விஜய், பவன் கல்யாண் ஆகியோரின் அரசியலை விமர்சித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகிய இருவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து காட்டமாகப் பேசி உள்ளார்.

பிரகாஷ் ராஜ் பேட்டி
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரகாஷ் ராஜ், "பவன் கல்யாண் தனது சகோதரர் சிரஞ்சீவியின் பலத்தால் அரசியலுக்கு வந்தவர். அவரது ரசிகர்கள் பட்டாளத்தை மட்டுமே தொண்டர்களாகக் கொண்டவர். சிரஞ்சீவியின் ரசிகர் பலத்தால் 2024-ல் ஆந்திரப் பிரதேச துணை முதல்வரானார். அவர் இதனை ஏற்காமல் இருக்கலாம். ஆனால், அதுதான் நிஜம்.
அதேபோல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு பிரபலமான இயக்குநர். அவர் தனது நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பே அவரை அறிமுகப்படுத்த ஏராளமான படங்களை தயாரித்தவர். பவன் கல்யாண் பல வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர், விஜய் அரசியலுக்கு புதியவர்.
அரசியல் தெளிவு இல்லை
நான் இவர்கள் இருவரோடும் படங்களில் நடிக்கும்போது ஒருபோதும் அரசியல் பற்றி தீவிரமாகப் பேசியதில்லை. அவர்கள் நடிகர்கள். அதன் பிரபலத்தைக் காரணமாக வைத்து அரசியலில் நுழைந்தனர். ஆனால், இருவரிடமும் தெளிவான அரசியல் பார்வையோ அல்லது மக்கள் பிரசசினைகள் குறித்த ஆழமான புரிதலோ இல்லை.
பவன் கல்யாண் தனது கட்சி தொடங்கி 10 ஆண்டுகளில், அவரிடம் ஒரு தொலைநோக்குப் பார்வையோ அல்லது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இருப்பதை பார்த்ததில்லை. அதை நான் விஜய்யிடமும் பார்க்கவில்லை. ஆனால், பவன் கல்யாண் அல்லது விஜய் போன்றவர்கள் அரசியலில் நுழையும்போது, மக்கள் ஏற்கனவே இருக்கும் சிஸ்டத்தில் ஒரு வெற்றிடத்தைத் தேடுகிறார்கள்.
விஜய் பேசும் வசனம் நல்லாத்தான் இருக்கு
அதன் காரணமாக அவர்களுக்கு சில இடங்கள் கிடைக்கக் கூடும். ஆனால், பின்னர் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். விஜய் பேசும் பேச்சை கேட்கிறேன். விஜய் வசனங்கள் பேசும்போது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அரசியலில் போராடுவதற்கு ஆழமான புரிதல் அவரிடம் இருக்கிறதா?
பவன் கல்யாண் பிரபலமான நடிகர் என்பதால் நாட்டின் தலைவிதியை அவரது கைகளில் கொடுக்க வேண்டுமா? அவர் தனது சித்தாந்தத்தில் தெளிவற்றவர். வேறு வேலையில்லாமல் இருந்தார்... ஆட்சிக்கு வந்தபின், அனைத்தையும் மறந்து, மேக்கப் போட்டு சனாதன தர்மம் பற்றிப் பேசுகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
ஜனநாயகன் படத்தில் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய பாஜக அரசுக்கு எதிராக தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், வலதுசாரிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரமாக அரசியல் கருத்துகளை முன்வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் 29 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார் பிரகாஷ் ராஜ்.
விஜய், பவன் கல்யாண் இருவர் உடனும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். விஜய் உடன் அவர் நடித்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தற்போது விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்திலும் பிரகாஷ் ராஜ் அவருடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications