புரட்சித் தலைவர்.. எம்ஜிஆர் மீது பாசத்தை கொட்டிய பவன் கல்யாண்! மேலிட உத்தரவா? பிரகாஷ்ராஜ் சுளீர்
சென்னை : அதிமுகவின் 53வது தொடக்க நாளை முன்னிட்டு எம்ஜிஆர் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார் ஆந்திர துணை முதலமைச்சரான பவன் கல்யாண். இந்த நிலையில் எம்ஜிஆர் மீது பவன் கல்யாணுக்கு திடீர் பாசம் ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கிய எம்ஜிஆர் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்தார். திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை உருவாக்கி, தான் சந்தித்த திண்டுக்கல் இடைத் தேர்தலில் மெகா வெற்றியை பெற்றவர்.

தொடர்ந்து திமுகவை வீழ்த்தி 13 ஆண்டுகள் தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். அதற்கு பிறகு ஜெயலலிதா அதிமுகவுக்கு தலைமை ஏற்ற நிலையில் பலமுறை தமிழகத்தை அதிமுக ஆண்டது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக தான் தமிழகத்தை எப்போதும் ஆளும் அல்லது ஆண்ட கட்சிகள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அதிமுகவின் தொடக்க நாள் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், எம்ஜிஆர் உடனான பழக்கம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்," புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீதான எனது அன்பும் அபிமானமும் மிகவும் அதிகம். நான் வளர்ந்த சென்னை என் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. அது இன்னும் அப்படியே இருக்கிறது. அதிமுக நிறுவனரான ம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 53வது தொடக்க நாள் அக்டோபர் 17ஆம் தேதி நடக்கிறது.
புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். மயிலாப்பூரில் படிக்கும்போது எனது தமிழ் மொழி ஆசிரியர் மூலம் புரட்சித்தலைவரை பற்றிய முதல் அறிமுகம் கிடைத்தது. ஒரு திருக்குறளை வாசித்த எனது தமிழ் ஆசிரியர் அதில் புரட்சித்தலைவரின் குணங்கள் பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டினார்.
'கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி'.

நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசர்களுக்கு அவர் ஒளி." என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் எம்ஜிஆர் மீது பவன் கல்யாணுக்கு திடீர் பாசம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். இதுதொடர்பாக பவன் கல்யாணின் எக்ஸ் பதிவை பகிர்ந்துள்ள அவர்,"திடீரென்று எம்ஜிஆர் மீது ஏன் இவ்வளவு அன்பு.. மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு வார்த்தை மோதல் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தபோது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் பவன் கல்யாண். அதற்கு பிரகாஷ்ராஜ் பதிலளித்திருந்தார்.
மேலும் மாநிலம் விட்டு மாநிலம் தாண்டியும் பவன் கல்யானுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக நெய் கலப்பட விவகாரத்தில் விரதம் இருந்த பவன் கல்யாண் திருப்பதி திருமலைக்கு நடந்தே சென்று கோயிலை சுத்தம் செய்தார். அப்போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பவன் கல்யாண் பேசியதும் சர்ச்சைக்கு உள்ளானது. சனாதனத்தை அழிக்க நினைப்பவர்களை அழிப்போம் என உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு பவன் கல்யாண் பேசிய நிலையில், வெயிட் அண்ட் சீ என ஒரே வரியில் பதிலளித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications