தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெக ஆட்சி 5 வருடங்கள் தொடருமா, கூட்டணி கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்கிற சந்தேகங்கள் நிலவுகின்றன. தவெக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி உருவாகியுள்ளதாக, கட்சி பட்டியலுடன் பிரவீன் சக்ரவர்த்தி பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரவீன் சக்ரவர்த்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) முதல் எம்பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி
அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு திமுகவினர், சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் எல்லாம் எப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்தன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பிரச்சனைகளின் அடிப்படையில் திமுகவுடன் இணைந்து பயணிப்போம் என்று சிபிஐ, சிபிஎம் அறிவித்துள்ள நிலையில், பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.
டெல்லியில் வருகிற 8ஆம் தேதி இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பிரவீன் சக்ரவர்த்தி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி உருவாகிறது என்றால், ஏற்கனவே இருந்த இந்தியா கூட்டணி என்ன ஆனது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications