உச்சக்கட்ட போதையில் தாறுமாறாக ஓட்டிய ஊழியர்.. கார் மோதி கர்ப்பிணி, குழந்தை காயம்.. சென்னையில் ஷாக்
சென்னை: சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் மதுபோதையில் காரை ஒட்டி கர்ப்பிணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தைப் பற்றி விரிவாக காண்போம்.
சென்னை அடையாறு அருணாச்சலப்புரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (28). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மது போதைக்கு அடிமையான அருண்குமார், நண்பர் முகேஷுடன் மது அருந்துவதற்காக திருவான்மியூர் கடற்கரை குப்பத்துக்கு காரில் சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

மதுபோதையில் விபத்து
முகேஷ் மது அருந்திவிட்டு அங்கிருந்து முதலில் தனியாக புறப்பட்டு சென்று விட்டார். இதனை தொடர்ந்து போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அருண்குமார் உச்சகட்ட போதையில் காரை எடுத்துள்ளார். அப்போது அவர் காரை ரிவர்ஸ் எடுக்க அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு ஆட்டோக்கள், ஒரு இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

கர்ப்பிணி மீது மோதியது
வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் அருண் காரை நிறுத்தும்படி எச்சரித்துள்ளனர். ஆனால் என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு மதுபோதையில் மூழ்கி இருந்த அருண்குமார் காரை வேகமாக ஒட்டியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்ற கார் அந்த வழியாக நடந்து வந்த கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை மீது மோதியது.

தர்ம அடி கொடுத்த மக்கள்
இதில் காயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அப்பகுதியினர் காரை நிறுத்தி, மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய அருண்குமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் அங்கு பதற்றம் நிலவியது. இது பற்றி தகவல் அறிந்த திருவான்மியூர் சட்டம்-ஒழுங்கு போலீசார் மற்றும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணை
அருண்குமாரை பிடித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கார் மோதியதில் காயம் அடைந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி திருப்பதம்மாள் (27) மற்றும் அவரது குழந்தை பிரனிகா (2) என்பது தெரியவந்தது.

தொடர்கதையாகும் விபத்துகள்
மது என்னும் அரக்கன் நம்மையும் பாதித்து நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் மிகபெரும் உதாரணமாகும். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகி விட்டது. மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications