தேமுதிகவின் பொருளாளரா, இளைஞரணி செயலாளரா? விஜய பிரபாகரனுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்! பிரேமலதா தகவல்
சென்னை: தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதை அவர் தெரிவித்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். அப்போது அவரது தீவிர ரசிகர்களாக இருந்தவர்கள் எல்லாம் அக்கட்சியில் இணைந்து பணியாற்றினர்.

இந்த நிலையில் கட்சித் தொடங்கிய அடுத்த ஆண்டே தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் ஒரு தொகுதியில் மட்டும் அதாவது விஜயகாந்த் போட்டியிட்ட தொகுதியில் மட்டும் அக்கட்சி வென்றது.
எனினும் அதிக அளவு வாக்கு சதவீதத்தை அக்கட்சி பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்த 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். அப்போது அவருக்கு 44 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றினார்.
இந்த தேர்தலிலும் தேமுதிக நிறைய வாக்கு சதவீதம் பெற்றது. எதிர்க்கட்சியாக இருந்த போது ஆளும் அதிமுக அரசு மின்சார கட்டணம், பேருந்து கட்டணத்தை உயர்த்திய போது கூட்டணி கட்சியாக இருந்தாலும் அதிமுகவை எதிர்த்து சட்டசபையில் குரல் கொடுத்தார் விஜயகாந்த்.
இதைத் தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்து வெளியேறவும் செய்தார். அதன் பின்னர் தேமுதிகவுக்கு தோல்விதான் கிடைத்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் காலமாகிவிட்டார். அவர் உடல்நிலை சரியில்லாத போதே அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
விஜயகாந்த் இறப்புக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் வென்றது.
விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலிருந்தே விஜய பிரபாகரன் அரசியலுக்கு வந்துவிட்டார். தேர்தல் பிரச்சாரங்கள், கட்சி கூட்டங்கள், கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்கள், நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டார். அவர் பார்ப்பதற்கு விஜயகாந்த் போல் இருந்ததால் அவரை தொண்டர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய பிரபாகரன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சில சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தார். அவர் விருதுநகர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேமுதிக தொண்டர்களிடமும் மக்களிடமும் விஜய பிரபாகரன் மீது நல்ல அபிப்ராயம் இருப்பதால் அவருக்கு கட்சி பதவி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணி.
விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். அதிமுக தலைமையிலான கூட்டணி வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம்.
விஜய பிரபாகரனுக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும். அது போல் தேமுதிக நிர்வாகிகளுக்கும் முக்கிய பதவிகள் கொடுக்கப்படவுள்ளது என தெரிவித்தார். இதனால் விஜய பிரபாகரனுக்கு எந்த மாதிரியான பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதாவது பிரேமலதா வகித்த பொருளாளர் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் இளைஞரணிச் செயலாளர் பதவியும் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே விஜய பிரபாகரனுக்கு கட்சி பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்படவில்லை. எனவே இந்த முறை பிரேமலதாவே சொல்லிவிட்டதால் அது எப்போது என தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications