முதுகில் குத்திய எடப்பாடி.. நான் அப்படி சொல்லவேயில்லையே! பிளேட்டைத் திருப்பிய பிரேமலதா? அப்போ திமுக?
சென்னை: மாநிலங்களவை எம்பி சீட்டு தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகவும், கூட்டணி தர்மத்தை மீறி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா பேசினார் என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் ஒருபோதும் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசவில்லை என விளக்கம் அளித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், ஊடகங்கள் தவறான செய்தியை பரப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
2026 தேர்தலில் அதிமுக கூட்டணியை வலுப்படுத்த தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் எம்பி சீட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. மேலும் திமுகவுடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாக தகவல் வெளியானது.

அதிமுக கூட்டணி
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேமுதிக பூத் கமிட்டி ஏஜென்ட் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார், மாநிலங்களவை சீட்டு தருவதாக கடிதமும் கொடுத்தார். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி அந்தக் கடிதத்தை தாங்கள் வெளியிடவில்லை என பிரேமலதா பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்த பேச்சு அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேமலதா பேச்சு
ஜனவரி மாதம் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என பிரேமலதா கூறி வந்த நிலையில் சில நாட்களாக திமுக தலைமையுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பல நேரங்களில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியதோடு, நேரிலும் அவரை சந்தித்துப் பேசியது அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்தது. மேலும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகக் கூறியதால் அதிமுக கூட்டணிக்கு அவர் வரமாட்டார் எனவும் சில நிர்வாகிகள் கூறி வந்தனர்.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், தான் எடப்பாடி முதுகில் குத்திவிட்டதாகப் பேசவே இல்லை, ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார் பிரேமலதா. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி நிலைப்பாடு குறித்துக் கூறிவிட்டேன். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியைப் பற்றி அறிவிப்பு செய்வேன். நான் சொல்லாததைச் சொல்லியதாகச் செய்தி வருகிறது.
தேர்தல் கூட்டணி
அதை நான் கண்டிக்கிறேன். நான் சொல்வதைத் தவறாகச் செய்தியாளர்கள் செய்தி போடுகிறார்கள். எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேசுவதை நான் பேசியதாகப் போடுவது தவறு. அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் எனச் சொன்னதாகத் தவறான செய்தியை ஊடகங்கள் பரப்பியுள்ளது கண்டனத்திற்குரியது. நாங்கள் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் எது வேண்டுமானாலும் பேசுவோம். அதை நான் சொன்னதாகச் செய்தியைப் பரப்பிய அனைத்து ஊடகங்களுக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். மேல்மருவத்தூரில் இருந்து சொல்கின்றேன். நான் எடப்பாடி அண்ணனை அப்படிச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லும் ஆளும் நான் இல்லை" எனக் கூறியுள்ளார்.
கூட்டணி சிக்கல்
எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார் என பிரேமலதா விஜயகாந்த் பேசியதால் திமுக தரப்பு உற்சாகத்தில் இருந்தது. மேலும் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்து வரலாம் எனவும் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராக இருந்தனர் திமுகவினர். இந்த நிலையில் அண்ணன் எடப்பாடி பழனிசாமியை சாமி சத்தியமாகப் பேசவில்லை என பிரேமலதா கூறி இருப்பது விருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிமுக உடனான கூட்டணியை அவர் தொடலாம் எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications