விஜயகாந்தை புகழ்ந்து பேசியதற்காக தவெக உடன் கூட்டணி சேர முடியாது.. பிரேமலதா ஓபன் டாக்!
சென்னை: விஜயகாந்த் பற்றி விஜய் பேசியதற்காக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேருவோம் என்று அர்த்தம் கிடையாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.
அண்மையில் மதுரையில் நடந்த தவெக மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில், எம்ஜிஆரை போல் குணம் படைத்த எனது அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவரும் இதே மதுரையை மண்ணைச் சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா? என்று பேசி இருந்தார். விஜயகாந்த் மறைந்த போது விஜய் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி இருந்தார்.

அதேபோல் GOAT படத்தில் விஜயகாந்தை நினைவு கூறும் வகையில், அவரின் முகமூடி அணிந்துதான் விஜய் அறிமுகக் காட்சியில் தோன்றுவார். அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் எங்கள் வீட்டு பையன் என்று அடிக்கடி பேசி வந்தார். இதனால் தேமுதிகவை கூட்டணியில் இழுக்க விஜய் முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.
அதுமட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்பை வெளியிட்ட போது, தவெக உடன் கூட்டணி அமைக்க இதுவரை எந்தக் கட்சியும் வரவில்லை. இதனால் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழலுக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார். இதனால் தற்போது தவெக தலைமையில் கூட்டணியை கட்டமைக்க விஜய் தீவிரமாக இருக்கிறார்.
அதற்கான சமிக்ஞையாகவே விஜயகாந்த் பற்றிய விஜயின் பேச்சு பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்தை புகழ்ந்து விஜய் பேசியது பற்றிய கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதற்காக தவெக உடன் கூட்டணி சேருவோம் என்று அர்த்தம் கிடையாது.
தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை ஜனவரி 9ஆம் தேதி நடக்கவுள்ள கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே திமுகவுடன் பிரேமலதா விஜயகாந்த் நெருக்கம் காட்டி வருகிறார். தேமுதிக தொடங்கப்பட்டதில் இருந்தே திமுக உடன் ஒருநாளும் அந்தக் கட்சி கூட்டணி அமைத்ததில்லை. இதனால் முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications