யாருடன் கூட்டணி? இன்னும் 4 நாட்களில் முடிவு தெரியும்.. மா.செக்களுடன் ஆலோசிக்கும் பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க, தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. திமுக, காங்கிரஸுடன் கடந்த 28-ஆம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருந்தார். அடுத்தகட்டமாக வரும் 9ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தொடர்ந்து, விசிக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதனிடையே, அதிமுகவிலும் தொகுதி பங்கீட்டு குழுவினர், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். எஸ்டிபிஐ கட்சியுடனும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் மறைவு காரணமாக தேமுதிகவுக்கு மக்கள் மத்தியில் அனுதாப அலை ஏற்பட்டுள்ளதால் அக்கட்சிக்கு கூடுதலாக வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க அதிமுகவும், பாஜகவும் தூது விட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிக சீட்கள் கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதில் பிரேமலதா உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதி? இன்று முடிவாகிறது.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக!
இந்நிலையில் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, முதன்முறையாக நடைபெறும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் 7-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2019 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக, 4 இடங்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. திமுக கூட்டணி கதவுகள் ஏற்கனவே கிட்டத்தட்ட மூடப்பட்டு விட்டதால் இந்த முறை அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications