ஆத்துல ஒரு கால்..சேத்துல ஒரு கால்! எந்தப் பக்கம் சேர்கிறது தேமுதிக? பிரேமலதாவின் ’ப்ளான் பி’ இதுதான்
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் சூடாகி வரும் நிலையில் தற்போது தேமுதிக எந்த கூட்டணியில் சேரப் போகிறது என்பது தான் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 2026ல் 8 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் தேமுதிகவுக்கான அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால் தற்போதைக்கு அவசரப்பட வேண்டாம் என நினைக்கிறார் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அதே நேரத்தில் அதிமுக திமுக ஆகிய இரு கூட்டணிகளையும் சம தூரத்தில் வைத்திருக்கும் அவர், எந்த கூட்டணி கடைசி நேரத்தில் வெற்றி கூட்டணியாக மாறுகிறதோ அந்த கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என காத்திருப்பதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி கணக்குகள் தீவிரமாகி வருகின்றன. குறிப்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எந்த கூட்டணியில் சேரப் போகிறார் என்ற கேள்வி தற்போது அரசியல் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
பிரேமலதா சமீபத்தில் "கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு அறிவிக்கப்படும்" என்ற ஒரு வாக்கியமே பல அரசியல் வட்டாரங்களிலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஏனெனில், இப்போது திமுகவிலும் அதிமுகவிலும் இருந்து தேமுதிகவுக்கு ஒரே நேரத்தில் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

பிரேமலதா விஜயகாந்த்
சமீபத்தில் பிரேமலதாவின் தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். அதன் மறுநாளே எடப்பாடி பழனிசாமியும், பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்று துக்கம் தெரிவித்தனர். இது சாதாரண மரபாகத் தோன்றினாலும், அதன் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் நோக்கங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால், அது மிக வலுவான கட்சிகளின் அணியாக மாறும்.
தேமுதிக கூட்டணி
இதனால், திமுக, தனது பக்கம் சில கட்சிகளை இணைத்து கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல், அதிமுக பக்கம் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு வலை வீசும் அரசியல் நிலை உருவாகியுள்ளது. முன்பு ராஜ்யசபா சீட் பிரச்சினை காரணமாக அதிமுகவுடனான உறவு முறிந்ததே தேமுதிகவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் பிரேமலதா திமுகவுடனும் நெருக்கமாக பேச ஆரம்பித்தார். முதல்வரை சந்தித்து நலம் விசாரித்ததும் அதற்குச் சான்று.
திமுக அதிமுக போட்டி
இதனால், திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற ஊகங்கள் கிளம்பின. ஆனால் அண்மையில் பிரேமலதா, திமுக அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை கடுமையாக விமர்சித்தது, இரு முக்கிய கட்சிகளையும் ஒரே தூரத்தில் வைத்து பார்க்கும் முயற்சியாக தான் பார்க்கப்படுகிறது. அதிமுக தற்போது கரூர் வழக்கை முன்வைத்து தவெகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தேமுதிகவும் அதிமுகவுடனான கூட்டணிக் கதவை இப்போதைக்கு அடைக்க வேண்டாம் என நினைக்கிறது. அதே நேரத்தில் திமுகவுடனான கூட்டணிக் கதவையும் அடைத்து விடவில்லை.
அரசியல் வியூகம்
தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் பெற 2026 சட்டமன்ற குறைந்தது 8 எம்எல்ஏக்கள் வெற்றி பெறுதல் அவசியம். அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் 10 தொகுதிகள் நிச்சயம் கிடைக்கும் என பிரேமலதா கருதுகிறார். காரணம் அதிமுக கூட்டணியில் விஜய் சேருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. பாமகவும் நிச்சயம் கூட்டணியில் சேர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கு இருக்கும் வாக்கு வங்கி பலமாகும். இதனால் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். கட்சியின் சில நிர்வாகிகளும் அதையே வலியுறுத்தியுள்ளனர்.
2026 தேர்தல்
ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு கிடைக்காவிட்டால் அந்த கூட்டணியை வேகமாக பயன்படுத்தி திமுக கூட்டணியில் இணைந்து தங்களுக்கு உரிய சீட்டுகளை கேட்டு பெறலாம் என பிரேமலதா நினைப்பதாகவும் சொல்கின்றனர். பிரேமலதா விஜயகாந்தை பொருத்தவரை தற்போதைக்கு 10 எம்எல்ஏக்கள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தான் முக்கியம் என நினைக்கிறார். இதற்காக எந்த கூட்டணிக்கும் அவர் செல்லலாம் என கூறப்படுகிறது. ஆனால் அது வெற்றி கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதுதான் பிரேமலதாவின் எண்ணம். அதனால்தான் ஜனவரி மாதம் வரை தனது கூட்டணி முடிவை ஒத்தி வைத்து இருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications