சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் தோல்வி! விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தேமுதிக மனு!
சென்னை: விருதுநகரில் லோக்சபா தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு தேமுதிக புகார் மனு அளித்துள்ளது.
விருதுநகர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார். மாணிக்கம் தாகூருக்கு கடுமையான டஃப் கொடுத்தார் விஜய பிரபாகரன். சுருக்கமாக சொல்ல போனால் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு பயம் காட்டினார் என்றே சொல்லலாம். கடைசியில் நடந்த ட்விஸ்ட்டாக விஜய பிரபாகரன் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரனுக்கு எதிராக சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா அளித்த பேட்டி அளித்த போது, விஜய பிரபாகரன் தோற்கவில்லை.
அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். திட்டமிட்டு சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13 ஆவது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது.
அது போல் நள்ளிரவில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மற்ற தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சூழ்ச்சி! விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் செல்போனை அணைத்து வைப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு இமெயில் மூலம் புகார் அளித்துள்ளோம். மேலும் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கேட்டிருக்கிறோம். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் பிறந்த ஊர் விருதுநகர் என்பதால் தேமுதிக சார்பில் அந்த லோக்சபா தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவருக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர். பிரேமலதாவும் இளைய மகன் சண்முகபாண்டியனும் பிரச்சாரம் செய்தார்.
விஜய பிரபாகரன் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்து வந்தாலும் பிறகு மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டியாளராக திகழ்ந்தார். இந்த நிலையில்தான் விஜய பிரபாகரன் தோல்வியை பிரேமலதா கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து விருதுநகர் தொகுதியில் வென்ற மாணிக்கம் தாகூர் சில ஊடகங்களிடம் கூறுகையில், பிரேமலதா குற்றச்சாட்டு பொய்யானது. அது சரியான போக்கு இல்லை. வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரனும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பூத்தில் இருந்தார்கள். அவர்களின் ஏஜென்ட்டுகளும் இருந்தார்கள்.
அப்படியிருக்கும் போது எப்படி தவறு நடக்கும், 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக கூறுகிறார்களே, அப்படி ஒன்று நடந்திருந்தால் அவர்கள் அங்கேயே பிரச்சினை செய்து கேட்டிருக்கலாமே! ஏன் அமைதியாக இருந்தார்கள். இரவு 7 மணிக்கு வாக்கு பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அவர்கள் கிளம்பி போய்விட்டார்கள்.
அதன் பிறகு தபால் ஓட்டுகள் 5 மணி நேரமாக எண்ணப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு நான் சான்றிதழை வாங்கினேன். விஜயகாந்த் பாடுபட்டு வளர்த்த கட்சியை பிரேமலதா தனது தவறான முடிவுகளால் அழித்தார். தற்போதும் அவருடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். விருதுநகரில் எதையும் பேசாமல் சென்னைக்கு போய்விட்டு பேசினால் எப்படி? மறுவாக்கு எண்ணிக்கைக்கு அவர்கள் மனு செய்திருந்தால் அது அவர்களுடைய இஷ்டம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications