ஓபனிங்கிலேயே என்ட் கார்டு.. ஓவர் தொல்லையால் கடுப்பான விஜய்! விக்கிரவாண்டிக்கு வண்டியை விட்டாச்சாமே?
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு எங்கு நடைபெறும் என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சியில் மாநாடு நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் விஜயின் முதல் மாநில மாநாடு நடக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்கின்றனர் அவர் கட்சி நிர்வாகிகள். இரண்டு நாட்களில் கட்சி பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக வலம் வரும் விஜய், அரசியலிலும் தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் அரசியலில் குதித்து இருக்கிறார். காரணம் அவருக்கு அந்த அளவுக்கு ரசிகர்களின் செல்வாக்கும் ஆதரவும் இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே தனது படங்களில் பஞ்ச் டயலாக்குகள் மூலம் அரசியல் ஆசையை காட்டி வந்த அவர் அதற்கு பிறகு தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். விஜய் மக்கள் இயக்கம் என பெயரிட்டு, கொடி உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அது மட்டுமல்லாமல் மீனவர்கள் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் விஜய் களத்தில் இறங்கி குரல் கொடுத்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
குறிப்பாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நடிகர் விஜய்யின் மாணவர்கள் உடனான சந்திப்பு பெரிய அளவில் அவருக்கு இளைஞர் பட்டாளத்தின் ஆதரவை பெற்று தந்தது. இந்த நிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் பெயரையும் அறிவித்திருக்கிறார். அரசியல் வருகை காரணமாக தனது திரை வாழ்வு முடிவுக்கு வருவதாக அவர் அறிவித்ததால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருந்த போதும் விஜய் எப்படி அரசியல் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுடைய ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் தி கோட் படத்திற்கு பிறகு விஜய் முழுமையான அரசியலில் ஈடுபட உள்ளார். விரைவில் நடைபெற இருக்கும் கட்சியின் முதல் மாநாட்டில் கொடி, கொள்கைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட இருக்கிறது. நிர்வாகிகள் நியமனம், முழுமையாக நிறைவடைந்து இருக்கும் நிலையில் கட்சியின் மாநாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய்.
கோட் திரைப்படம் வெளியான பிறகு செப்டம்பர் கடைசி வாரத்தில் நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் மதுரை அல்லது திருச்சியில் விஜய் மாநாட்டை நடத்துவார் எனக் கூறப்பட்டது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அதே நாட்களில் தங்களுக்கு மாநாடு நடத்த இடம் வேண்டுமென சாதி அமைப்பு ஒன்று விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனால் யாருக்கு இடம் ஒதுக்குவது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் சேலம், மதுரை, திருச்சி என பல இடங்களில் விஜய் மாநாட்டுக்கான இடத்தை தேர்ந்தெடுத்த போதெல்லாம் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி ஒன்று இருப்பதாகவும் அக்கட்சியின் குறுநில மன்னர்களாக கருதப்படும் சிலர் மாநாட்டுக்கு இடம் கொடுக்கக் கூடாது என உள்ளூர் நில உரிமையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் அப்படி இல்லை என மறுக்கப்பட்டாலும் அதுதான் உண்மை என்கின்றனர் விஜய் ஆதரவாளர்கள். இந்த நிலையில் நடிகர் விஜய் மாநாட்டை சென்னைக்கு அருகே நடத்த திட்டமிட்டு இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 22 செப்டம்பர் 26 ஆகிய தேதிகளுக்குள் இந்த மாநாடு நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனால் தென் மாவட்டங்களில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு நாள் பயணம் மேற்கொண்டால்தான் மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்ல முடியும் என்பதால் அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் திருச்சி அல்லது மதுரை போன்ற தமிழகத்தின் மையப் பகுதிகளிலேயே கட்சியின் முதல் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. இதனால் விஜய் தரப்பும் எங்கு மாநாட்டை நடத்துவது என்ற குழப்பத்தில் இருக்கிறது.
"மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் முன்னதாகவே தேதியையும் இடத்தையும் அறிவித்தால் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும். ஆனால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தலைமை சொல்லிக் கொண்டே இருப்பதால் விளம்பரங்கள் கூட செய்ய முடியாமல் தவிர்த்து வருகிறோம். கடைசி நேரத்தில் மாநாட்டை மக்களிடமும் தொண்டர்களிடமும் கொண்டு சேர்ப்பது சிரமம் என்பதால் முதலிலேயே தேதி, இடம் ஆகியவற்றை விஜய் இறுதி செய்து அறிவிக்க வேண்டும்" என்கின்றனர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications